Last Updated : 06 Dec, 2019 02:19 PM

Published : 06 Dec 2019 02:19 PM
Last Updated : 06 Dec 2019 02:19 PM

முதல் பார்வை: இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு 

இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தாமல் விடப்பட்ட குண்டு மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கினால், அது காவல் நிலையத்தில் இருந்து களவு போனால், அதற்குக் காரணம் என்று காயலாங்கடை லோடு ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்தான் என்று குற்றம் சுமத்தினால் அதுவே 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஓர் இளம் தாய், தன் குழந்தையுடன் மாமல்லபுரம் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அங்கு கரை ஒதுங்கிக் கிடக்கும் குண்டைத் தாண்டி அந்தக் குழந்தை ஓடும் போது தடுக்கி விழுகிறது. குழந்தையை வாரி அணைக்கும் அந்தத் தாய் குண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியாகி, போலீஸுக்குத் தகவல் கொடுக்கிறார். காவலர் ஒருவர் அந்த குண்டை எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் வைக்கிறார். ஏரியாவாசி ஒருவர் இரவில் அதைத் திருடி இரும்பு வியாபாரியிடம் எடைக்கு விற்கிறார். அது காயலாங்கடைக்கு வந்து லாரி டிரைவர் ரமேஷ் திலக்கின் காலைப் பதம் பார்க்கிறது.

இந்நிலையில் காணாமல் போன குண்டைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் காவல் துறை தீவிரம் காட்டுகிறது. ஆனால், அந்த குண்டு தன் கைக்கு வர வேண்டும் என்று ஆயுதங்கள் விற்கும் இடைத்தரகர் ஜான் விஜய் காய் நகர்த்துகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் லிஜிஷும் பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து குண்டைத் தேடிப் புறப்படுகிறார். இதனிடையே களப் பணியாளரும் பத்திரிகையாளருமான ரித்விகா குண்டு குறித்துக் கேள்விப்பட்டு அதைக் கைப்பற்றும் நோக்கத்துடன் விசாரிக்கிறார். குண்டைத் தேடும் பயணத்தைச் சளைக்காமல் தொடர்கிறார். ஒருவழியாக அந்த குண்டு தினேஷ் ஓட்டும் லாரியில் குவிந்துகிடக்கும் இரும்புக் கழிவுகளில் ஒன்றாக இடம் பெறுகிறது.

கப்பலின் உடைந்த பாகம், ஏதோ ஒரு இரும்புப் பொருள், பித்தளையைப் பிரித்தெடுக்க வேண்டிய பொருள் என்று காயலாங்கடையில் இருப்பவர்கள் நினைக்க, அது வெடிகுண்டு என்று தினேஷுக்குத் தெரியவருகிறது. அதே நேரத்தில் அவரின் காதலி ஆனந்திக்குப் பிரச்சினை நேர்கிறது. ஆணவக் கொலை முயற்சியில் அண்ணனும் அண்ணியும் ஈடுபடம், அதிலிருந்து தப்பி ஓடி வருகிறார் ஆனந்தி. அவருக்கு அடைக்கலம் தர நினைக்கும்போது சாதிப் பிரச்சினை துரத்துகிறது. ஏற்கெனவே தொழிலாளி- முதலாளி பிரச்சினையில் அவஸ்தைப்படும் தினேஷ் லாரி டிரைவர் ஆகும் முயற்சிகளை முன்னெடுக்கிறார். அது முழுமை பெற அந்த குண்டை புதைத்துவைக்க வேண்டிய நிர்பந்தம்.

சாதிப் பிரச்சினையில் ஆனந்தியின் அண்ணன் துரத்த, குண்டு வைத்திருப்பதால் போலீஸ் ஒருபக்கம் துரத்த, திருமண ஏற்பாடுகள் தடைபட தினேஷ் திரிசங்கு நிலையில் சிரமப்படுகிறார். இந்தப் பிரச்சினைகளை தினேஷால் சமாளிக்க முடிந்ததா, ஆனந்தி என்ன செய்கிறார், யார் கையில் குண்டு கிடைத்தது, குண்டு சொல்ல வரும் செய்தி என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

போஸ்டர்கள், ட்ரெய்லர் மூலம் கவனிக்க வைத்தவ இயக்குநர் அதியன் ஆதிரை போரின் பாதிப்புகளை புகைப்படங்கள் மூலம் பதிவு செய்து, இடதுசாரியின் பார்வையில் படத்தை இயக்கியுள்ளார். அரசியல் தெளிவு, திரைக்கதையை அணுகிய விதம், கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைக்கும் புள்ளி என தேர்ந்த இயக்குநராகத் தடம் பதிக்கிறார். இரும்புக் கடையில் வேலை செய்த அனுபவம் இருப்பதால் அதன் வலிகளை, வேதனைகளை அப்படியே கதாபாத்திரங்கள் மூலம் இறக்கி வைத்திருக்கிறார். நமக்கு அருகில் இருப்பவர்களின் அறியப்படாத பக்கங்களின் துயரங்களை நேர்மையாகச் சொன்ன விதத்தில் சிறிதும் சமரசமில்லாமல் தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.

'அட்டகத்தி', 'குக்கூ', 'விசாரணை', 'அண்ணனுக்கு ஜே' படங்களில் அசாத்தியமாக நடித்த தினேஷ் இதில் செல்வம் கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பில் தனித்து ஸ்கோர் செய்கிறார். அவரது யதார்த்த நடிப்பு அவ்வளவு கச்சிதம். சத்தம் போட்டுப் பேசுவது, சரக்கடித்து விட்டு முதலாளியுடன் சலம்புவது, அப்பனுக்கு நேர்ந்த கதியால் தன் புள்ளைக்கும் அப்பா இல்லாமல் போய்விடுமோ என்று கலங்குவது, காதலிக்குத் தைரியம் தருவது, செம்மையாய் வாழலாம் என்று நம்பிக்கை விதைப்பது, உளவு பார்க்க வந்தவன் என்று தெரிந்தும் பாரபட்சம் இல்லாமல் அன்பு செலுத்துவது, வெடிகுண்டா என்று அதிர்வது, குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு பதறி முடிவை மாற்றிக்கொள்வது என அடர்த்தியான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். லாரி ஓட்டுநருக்கான பிம்பத்தையும் பொதுப்புத்தியையும் தினேஷ் தன் நடிப்பால் உடைத்தெறிந்துள்ளார்.

'பரியேறும் பெருமாள்' படத்தில் ஜோவின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் தான் சித்ரா கதாபாத்திரம். அதனை அப்படியே உள்வாங்கி நடித்துள்ளார் ஆனந்தி. ஆசிரியைக்கு உண்டான தோரணை, காதல் மீதான நம்பகத்தன்மை, காதலன் மீதான அளவற்ற அன்பு என எல்லாவற்றிலும் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். ''உன்னை டிரைவர் டிரைவர்னு கூப்பிடுறானுங்க. நீ பாட்டுக்கு கம்முனு வர்ற.. கலெக்டரை கலெக்டர்னும் மந்திரியை மந்திரின்னா கூப்புடுறானுங்களா. மூஞ்சியில ரெண்டு குத்து விடாம'' என்று தினேஷிடம் பேசுவது ஒற்றை உதாரணம். டிரைவரைக் காதலிப்பது குறித்து தோழிகள் சொல்வதை அப்படியே காதலனிடம் ஒப்பிக்கும் காட்சிகளில் சராசரியான பெண்ணாக இருப்பவர், அண்ணன் தூக்கு மாட்டிக்கொள்ள முயலும்போது பத்து பேர் இருக்கும்போது பட்டப்பகலில் யாராவது தூக்கு மாட்டிக் கொள்வார்களா என்று எகத்தாளமாய்ப் பேசி, காதலின் ஆழத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கிறார்.

முனீஷ்காந்த் ராமதாஸுக்கு இது முக்கியமான படம். மனிதர் குணச்சித்திர நடிப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார். தனக்காக அழும் தினேஷை குருவாக ஏற்று அவர் நடந்துகொள்ளும் விதம் ஆஸம்.

மாரிமுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 'என்னது காயலாங்கடைக்கு எல்லாம் சங்கமா?' என்று எகிறும் அவர் அதற்குப் பின் காணாமல் போகிறார். போஸ்டர் நந்தகுமார், ரமேஷ் திலக், சூப்பர் குட் சுப்பிரமணி, வினோத், ரமா, ரித்விகா என படம் முழுக்க ரஞ்சித்தின் நிலையக் கலைஞர்கள் உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் தொங்கலில் இருக்க, ரித்விகா மட்டும் களப் பணியாளருக்கான கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். போனில் மட்டும் டீல் பேசி வில்லத்தனம் செய்யும் ஜான் விஜய் சும்மா வந்து போகிறார். கருப்பு நம்பியார், அம்பேத் ஆகியோரும் போகிற போக்கில் தங்கள் இருப்பைப் பதிவு செய்கிறார்கள்.

‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக் கலைஞர்களில் ஒருவரான டென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆக புரமோஷன் பெற்றுள்ளார். டென்மாவின் இசையில் உமாதேவி வரிகளில் நிலமெல்லாம் எங்கள் வியர்வையில் முளைக்க, இருச்சியம்மா பாடல்களும், தனிக்கொடியின் மாவுலியோ பாடலும் களத்துக்குக் கனம் சேர்க்கின்றன. பின்னணி இசையிலும் டென்மா அதிர வைத்து திரும்பிப் பார்க்க வைக்கிறார்.

கிஷோர் குமார் அசல் காயலாங்கடையையும், மாமல்லபுரம், விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னையின் நிலப்பரப்பின் தன்மையையும் அப்படியே கேமராவுக்குள் அள்ளி வந்துக் கொடுத்துள்ளார். காயலாங்கடை செட், திருவிழா ஆகியவற்றில் கலை இயக்குநர் ராமலிங்கத்தின் உழைப்பு பளிச்சிடுகிறது.

இரண்டாம் பாதியில் திசையின்றித் திரியும் திரைக்கதையை இழுத்துப் பிடிக்க, இயக்குநர் ஒத்துழைப்புடன் சில இடங்களில் எடிட்டர் செல்வா கத்தரி போட்டிருக்கலாம். இயல்பான சண்டைக் காட்சிகளில் ஸ்டன்னர் ராம் நிமிர வைக்கிறார். ஆண்டனி ரூபனின் ஒலி வடிவமைப்பில் நேர்த்தியை உணர முடிகிறது.

2000 கோடி ரூபாய் செயல் திட்டம் குறித்து போனில் பேசுவது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை ஒரு இன்ஸ்பெக்டர் வைத்து டீல் செய்வது நம்பும்படி இல்லை. ஜான்விஜய்- மத்திய அமைச்சர் தொடர்புடைய காட்சிகள் பலவீனம். நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதையில் சில காட்சிகள் தேவையில்லாமல் திணிக்கப்படுவது, படத்தின் ஓட்டத்தைத் தடுக்கின்றது. காதல் பிரச்சினை திரைக்கதையின் திசை திருப்பல் உத்தியாகவே இருந்தாலும் அது தேவையற்ற ஒன்றாகவே உள்ளது. அதுவே இரண்டாம் பாதியின் தொய்வுக்குக் காரணம். ரித்விகா, தினேஷ், லிஜிஷ் ஆகியோர் ஒரே இடத்தில் சந்திப்பது நம்பும்படியாகவும் தற்செயலாகவும் இல்லை. தோழரின் பைக்கில் ஆனந்தி லிஃப்ட் கேட்டு வருவதெல்லாம் ஒட்டவில்லை.

சர்வதேச அரசியல் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநர் அதியன் ஆதிரை, குண்டு என்ன செய்யும் என்கிற பதற்றத்தைக் கடத்திய விதத்தில் வென்றிருக்கிறார். ஃபார்முலா சினிமாக்களுக்கு மத்தியில் புதிய களத்தில் நேர்மையையும் உண்மையையும் சொன்ன விதத்தில் ஆச்சரியப்படுத்துகிறார். நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் படம் வந்தாலும் இடதுசாரியின் பார்வையில் சிவப்புப் புரட்சியை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு படத்துக்கு முக்கியத்துவம் அளித்த இயக்குநர் பா.ரஞ்சித்தும், தன்மை உணர்ந்து களத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்குநர் ஆதியன் ஆதிரையும் பாராட்டுக்கு உரியவர்கள்.

தொழிலாளி- முதலாளி வர்க்கப் பிரச்சினை, உழைப்புச் சுரண்டல், அமைப்பு சாராத் தொழிலாளர்களாகவே முதலாளி நடத்தும் அவலம், சங்கம், நஷ்ட ஈடு என்று எதுவும் அறியாமல் தொழிலாளர்கள் இருப்பதன் சோகம், ரத்தம் சிந்திய இடத்தில் மண்ணைப் போட்டு உடனே வேலை பார்க்கும் சக தொழிலாளர்களின் வேலை குறித்த பயம், சர்வதேச அரசியல், மத்திய அமைச்சரின் சதி, ஆயுதம் விற்கும் இடைத்தரகரின் செயல்பாடு, காவல்துறையின் களங்கம், தொழிற்சாலை மேலாளரின் மனோபாவம், போராளியின் குணம், இயல்பு நிலையைத் தொலைத்து ஆவேசப்படும் தொழிலாளியின் கோபம் என்று அத்தனை விஷயங்களையும் அடுக்கி இருக்கிறார்.

காலில் ரத்தம் கொட்டிய நிலையில் தொழிலாளி கண்ணீர் சிந்தும்போது, டிபன் பாக்ஸில் உள்ள உணவைச் சாப்பிட்டபடி, 50 ரூபாயை எடுத்து நீட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்லும் முதலாளியின் மனோபாவத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கிறார். முறைகேடு நடந்தால் பிரச்ச்சினை ஏற்பட்டால் எந்த விதக் குற்றமும் கடைநிலைத் தொழிலாளியின் தலையில்தான் விடியும் என்பதையும் இயக்குநர் போகிற போக்கில் சொல்கிறார்.

''இப்போ உனக்கும் எனக்கும்தான் சண்டையா... நம்ம ரெண்டு பேரையும் ஒருத்தன் கொல்றதுக்கு வந்திருக்கான்...
அந்த குண்டு வெடிச்சா 500 வருஷம் புல்லு, பூண்டு கூட முளைக்காதுடா'', ''என்ன பிரச்சினை இருந்தாலும் ஆயுதத்தை மட்டும் தூக்கக்கூடாது, பேசித் தீர்த்துக்கணும்'' உள்ளிட்ட வசனங்களில் அதியன் ஆதிரையும் திருவாசகம், ஆதவன் தீட்சண்யா, ஜெய்குமார் உள்ளிட்ட திரைக்கதைக் குழுவும் பலத்த கை தட்டல்களைப் பெறுகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஈடுபடாத சண்டையிடாத நாடான இந்தியாவில் எப்படி குண்டு வந்தது, எவ்வளவு குண்டுகள் இப்படி மறைக்கப்பட்டு கடலுக்கு அடியில் கிடக்கின்றன, போர் தரும் வலி, அதன் பாதிப்புகள், அமைதியான தீர்வு, அன்பின் மகத்துவம் என எல்லாவற்றையும் பதிவு செய்த விதத்தில் ஆதிரை ஆளுமை மிக்க இயக்குநர் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரு குண்டு மூலம் தமிழ் சினிமாவின் களத்தில் சுவாரஸ்யம் நிகழ்த்திய விதத்திலும், ட்ராவல் மூவிக்கான பதற்றத்தையும் பரபரப்பையும் கொடுத்த விதத்திலும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் இடம் பெறுகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x