

வி.ராம்ஜி
விஜயகாந்துக்கு முதல் படமாக அமைந்தது ‘இனிக்கும் இளமை’. அதேசமயம், முதல் ஹிட் பாடலாக ‘அகல்விளக்கு’ படத்தின் ‘ஏதோ நினைவுகள்’ பாடல் அமைந்தது.
விஜயராஜ், நடிகர் விஜயகாந்த் என மாறியது ‘இனிக்கும் இளமை’ படத்தில் இருந்துதான். இதுதான் விஜயகாந்தின் முதல் படம். இந்தப் படத்தை எம்.ஏ.காஜா இயக்கினார்.
ராதிகா முதலானோர் நடித்த இந்தப் படம் ரசிகர்களை பெரிய அளவுக்கு ஈர்க்கவில்லை. என்றாலும் படம் ஓரளவுக்கு ஓடியது. படத்தில் நடித்த விஜயகாந்தும் பெரிதாகப் பேசப்படவில்லை.
1979-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி ‘இனிக்கும் இளமை’ ரிலீசானது. அடுத்த வருடம் 1980-ம் ஆண்டு இயக்குநர் கே.விஜயன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘தூரத்து இடி முழக்கம்’ வெளியானது. வித்தியாசமான கதைக்களம் என்று பாராட்டுகளைப் பெற்றது. விஜயகாந்த் கவனிக்கப்பட்டார். என்றாலும் இந்தப் படமும் பெரிதாகப் போகவில்லை.
‘இனிக்கும் இளமை’ படத்துக்கும் ’தூரத்து இடி முழக்கம்’ படத்துக்கும் நடுவே இன்னொரு படம் வந்தது. மிகச்சிறந்த நடிகை ஷோபாவுடன் விஜயகாந்த் நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கதை, வசனகர்த்தாக்களில் ஒருவரான ஆர்.செல்வராஜ், இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் ‘அகல்விளக்கு’.
1979-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 7-ம் தேதி ‘அகல்விளக்கு’ வெளியானது. இந்தப் படத்தில் ஓர் சுவாரஸ்யம். அரசியல்வாதியாக நடித்திருந்தார் விஜயகாந்த். ‘பணக்காரனைப் புறக்கணிக்க முடியுது. ஆனா பணத்தைத்தான் புறக்கணிக்கமுடியல’ என்பன போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ஆனாலும் ‘அகல்விளக்கு’ ஜொலிக்கவில்லை. ஆனால் பாடல்கள் கொண்டாடப்பட்டன.
முதல் படமான ‘இனிக்கும் இளமை’க்கு சங்கர் கணேஷ் இசை. ‘தூரத்து இடி முழக்கம்’ படத்துக்கு சலீல் செளத்ரி இசை. இரண்டாவது படமாக வெளிவந்த ‘அகல்விளக்கு’ படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் விஜயகாந்த் - ஷோபாவுக்கு ஒரு டூயட் பாடல் உண்டு. ‘அகல்விளக்கு’ பட டைட்டிலையும் படத்தையும் ரசிகர்கள் மறந்திருக்கலாம். ஆனால், விஜயகாந்த் - ஷோபா நடித்த இந்த டூயட் பாடலை இன்னும் மறக்கவே இல்லை. மறக்கவே முடியாத பாடலாக அமைந்துவிட்டது.
கே.ஜே.யேசுதாஸின் காந்தக் குரலும் எஸ்.பி.ஷைலஜாவின் மயக்கும் குரலும் சேர்ந்து இந்தப் பாடலை நம் மனதுக்கு நெருக்கமான பாடலாகக் கொண்டு சேர்த்தது. அப்படி மனதுக்கு நெருக்கமாகி, மனதிலேயே தங்குவதற்குக் காரணம்... இளையராஜாவின் இசை.
‘ஏதோ நினைவுகள்... கனவுகள்... மனதிலே மலருதே’ என்ற பாடல். பாடலின் துவக்கத்திலேயே ஜேசுதாஸின் குரலில்... ‘ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்’ என்ற ஹம்மிங்கும் அதையடுத்து ‘ஆஆஆஆஆஆஆஆ.... ஆஆஆஆஆஆஆஆஆஆஆ.... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ’ என்ற ஷைலஜாவின் குரலில் ஹம்மிங்கும் வர.. அந்த ஹம்மிங்கிலே ஜிம்மிக்ஸ் செய்திருப்பார் இளையராஜா.
பாடலின் இடையே தபேலா விளையாடும். கிடார் பேசிக்கொண்டிருக்கும். புல்லாங்குழலால் வித்தைக் காட்டிக்கொண்டிருப்பார்.
‘மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும் ம்ம்ம்ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும்நாள் வேண்டும்
என்று பாடிவிட்டு அப்படியே ஹைபிட்ச்சுக்கு மெல்ல மாறுவார் ஷைலஜா.
’தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்
சேரும் நாள் வேண்டும்’ என்று குழைவும் வேண்டுதலுமாய் பாடியிருப்பார்.
அதேபோல்,
‘நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம் ம்ம்ம்ம்ம்ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
என்று பாடிவிட்டு, ஜேசுதாஸின் குரல் மெல்ல ஹைபிட்ச்சுக்குச் செல்லும்.
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும் ஏக்கம் உள்ளாடும்
என்று நம் மனதைக் கொள்ளையடித்திருப்பார்.
பிறகு பாடலின் நிறைவில்...
‘ஏதோ நினைவுகள்’ என்பார் ஜேசுதாஸ். ‘கனவுகள்’ ஷைலஜா பாடுவார். ஆளுக்கொரு வார்த்தை பாடவைத்து இன்றைக்கும் நம் நினைவுகளில் பாடும்படி, பாடிக்கொண்டே இருக்கும்படி செய்துவிட்டார் இளையராஜா.
‘ஏதோ நினைவுகள்... கனவுகள்’ பாடல் நம் செவிகளுக்குள் நுழைந்தது 1979 டிசம்பர் 7-ம் தேதி. அதாவது ‘அகல்விளக்கு’ ரிலீசான நாள். இந்தப் பாடல் வந்து 40 வருடங்களாகிவிட்டன.
கொசுறு தகவல் : ஷைலஜாவை, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் ‘சோலைக்குயிலே’ பாடல் மூலம் அறிமுகப்படுத்தினார் இளையராஜா. இந்தப் படம் 79-ல் மே 5-ம் தேதி வெளியானது. இந்தப்படத்தையும் ஆர்.செல்வராஜ் இயக்கியிருந்தார்.
விஜயகாந்துக்குக் கிடைத்த முதல் ஹிட் பாடலை இப்போது ஒருமுறை கேட்டுப் பாருங்கள். முடிந்தால், பாடல் காட்சியைப் பாருங்கள். பெல்பாட்டமும் பட்டைபட்டனுமாக, அடர்த்தி முடியும் கிருதாவுமாக எண்பதுகளின் வித்தியாச விஜயகாந்தையும் ரசிக்கலாம்.