

வக்கிர புத்தி கொண்டவர்களுக்கு இதுவொரு பாடம் என்று ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.
இன்று (டிசம்பர் 6) அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், "நீதி வென்றது... ! அந்த சகோதரியின் ஆன்மா அமைதியடையட்டும்! வக்கிர புத்தி கொண்டவர்களுக்கு இதுவொரு பாடமாக இருக்கும்! இந்தக் கடும் நடவடிக்கையை மேற்கொண்ட காவல் அதிகாரிகளுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்" என்று தெரிவித்துள்ளார்.