

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ராட்சசன்' படத்தின் இந்தி ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.
இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இதர மொழிகளில் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இதில் இந்தி ரீமேக் உரிமையை மட்டும், பட வெளியீட்டுக்கு முன்பே விஷ்ணு விஷால் கைப்பற்றிவிட்டார்.
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தி ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கியது. தற்போது அதில் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் பாலிவுட் முன்னணி நிறுவனத்துடன் இணைந்து, தானே இந்தி ரீமேக்கை தயாரிக்கத் திட்டமிட்டார் விஷ்ணு விஷால்.
ஆனால், தற்போது இந்தி ரீமேக் உரிமையை வேறொருவருக்கு விற்றுவிட்டார். ஆகையால், ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளது தொடர்பாக விசாரித்தபோது, ஒருவரை நாயகனாக அறிமுகப்படுத்தவே 'ராட்சசன்' ரீமேக்கை கைப்பற்றினார்கள். ஆகையால், ஆயுஷ்மான் குரானா நடிப்பதாக வரும் செய்தி வதந்தியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்தார்கள்.
மேலும், ஆயுஷ்மான் குரானா நடித்த 'பதாய் ஹோ', 'அந்தாதூன்' மற்றும் ’விக்கி டோனர்’ ஆகிய படங்கள்தான் தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.