

இசை, தொலைக்காட்சி, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கடும் போட்டிக்கு இடையே விற்பனையாகிவிட்டதால் 'தளபதி 64' படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் டெல்லி படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. அடுத்தகட்டமாக, ஷிமோகாவில் உள்ள சிறையில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், அங்கு கடும் மழை பெய்து வருவதால், சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டனர்.
சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஷிமோகா சிறையில் முக்கியக் காட்சிகளைப் படமாக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்னும் இந்தப் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட எதையுமே படக்குழு முடிவு செய்யவில்லை. முழுக்க படப்பிடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.
அதற்குள் படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைமும் கைப்பற்றியுள்ளன. இதுவரை டிஜிட்டல் உரிமத்துக்குக் கொடுக்கப்படாத பெரிய விலையைக் கொடுத்து 'தளபதி 64' டிஜிட்டல் உரிமத்தைக் கைப்பற்றியுள்ளது அமேசான். இந்த விற்பனையால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.
இந்தப் படத்தில் மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.