

'தனுசு ராசி நேயர்களே' படத்தில் இணைந்த ஹரிஷ் கல்யாண் - சஞ்சய் பாரதி ஆகியோர் மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள்.
சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தனுசு ராசி நேயர்களே'. பிரமோத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நாளை (டிசம்பர் 6) இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சஞ்சய் பாரதி இயக்கவுள்ள அடுத்த படத்திலும் ஹரிஷ் கல்யாணே நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை தனஞ்ஜெயன் தயாரிக்கவுள்ளார். இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது தொடர்பாக தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, "’தனுசு ராசி நேயர்களே' படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்தான் சஞ்சய் பாரதி. அவரை நீண்ட நாட்களாகவே தெரியும்.
இயக்குநர் விஜய்யும் அவரைப் பற்றி நல்ல விதமாகவே பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் அடுத்த படம் என்ன என்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என்னிடம் ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதை ஒன்று சொன்னார். ரொம்பவே பிடித்திருந்தது.
ஹரிஷ் கல்யாணும் தெரிந்தவர். தொடர்ச்சியாகக் காதல் கதைகளிலேயே நடித்து வந்தவரிடம் இந்தக் கதை குறித்துச் சொன்னேன். உடனே ஏற்கெனவே பணிபுரிந்த இயக்குநர் வேறு, நானே பண்றேன் என்றார். விரைவில் படத்தின் பணிகள் தொடங்கவுள்ளன" என்று தனஞ்ஜெயன் தெரிவித்தார்.