

எடிட்டர் மோகன் எழுதிய ‘வேலியற்ற வேதம்’ மற்றும் அவரது மனைவி வரலட்சுமி மோகன் எழுதிய ‘தனி மனிதன்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 3) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “இது என் குடும்ப விழா என்பதால் வந்துள்ளேன். புத்தகத்தின் அட்டைப் படத்தில், பல சாதனைகளைச் செய்துவிட்டு உட்கார்ந்திருப்பது போல், கெத்தாக உட்கார்ந்திருக்கிறார் எடிட்டர் மோகன். அதேபோல், புத்தகத்தின் கடைசியில் இருக்கும் குடும்பப் புகைப்படத்தைப் பார்க்கும்போது, அப்படியொரு குடும்பத்தைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது எனத் தோன்றியது.
உதவி இயக்குநராக இருக்கும்போது, சிவாஜி சார் வீட்டுக்கு அடிக்கடி போவேன். அப்போது அவர்கள் ஒரே குடும்பமாக இருந்தனர். இந்தப் புத்தகத்தின் கடைசிப் பக்க புகைப்படத்தைப் பார்க்கும்போது, அதுதான் ஞாபகம் வந்தது. எடிட்டர் மோகன், திருமங்கலத்தில் இருந்து நடந்தே வந்தவர். ஆனால், நான் மதுரையில் இருந்து டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்தேன்.
எப்படியென்றால், மதுரையில் ஏறினேன், திண்டுக்கல்லில் இறக்கிவிட்டனர். அங்கு ஏறினேன், திருச்சியில் இறக்கிவிட்டனர். இப்படியாகச் சென்னை வந்தேன். அப்படியே கஷ்டப்பட்டு உதவி இயக்குநரானேன். எனக்குத் தங்க இடம் கொடுத்தார் ஷோபாவின் அப்பா நீலகண்டன். அவர் வீட்டிலேயே தங்கி, அவருடைய பெண்ணையே காதலித்தேன். ஆனால், எடிட்டர் மோகன் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இப்படி எங்களுக்குள் சில ஒற்றுமைகள் உள்ளன.
‘தனி ஒருவன்’ புத்தகத்தைப் படித்தபோது, நம்முடைய வாழ்க்கையையே எழுதி, நம்மையே படிக்கச் சொல்கிறாரே எனத் தோன்றியது. அதேபோல், தமிழில் ஹிட்டான படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யத் திட்டமிடுகிறார் மோகன். அந்த சமயத்தில் காரில் போய்க் கொண்டிருந்தபோது, ‘அப்பா... நான் இயக்குகிறேன்’ என்று ராஜா சொன்னவுடன் அவருக்குப் பயங்கர ஷாக். அப்படியே மகனை இயக்குநராக்கினார்.
நானும், என் மகனை (விஜய்) கஷ்டப்பட்டு லயோலா கல்லூரியில் விஸ்காம் சேர்த்தேன். ஒரு வருடம்தான் படித்தார். அடுத்த வருடமே, ‘நான் நடிக்கணும்’ என்று வந்து நின்றார். நான் நடிகனாக்கினேன், அவர் இயக்குநராக்கினார்.
அதேபோல், இஸ்லாம் முறைப்படி எடிட்டர் மோகனுக்கு 2-வது திருமணம் நடைபெற்றது. எனக்கு, கிறிஸ்தவ முறைப்படி 2-வது திருமணம் நடைபெற்றது. 6 வயதில் தன் அப்பாவின் திருமணத்தைப் பார்த்தது என் மகனாகத்தான் இருக்கும்.
நமது இருவரின் உழைப்புதான் இன்றைய இளைஞர்களுக்குப் போகவேண்டும். அந்த உழைப்பு, என்றைக்குமே வீண் போகாது. உங்களுடைய எழுத்துகளில் கூட, தான் ஒரு நல்ல எடிட்டர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். மனைவி வரலட்சுமி தனக்குக் கிடைத்தது வரம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அந்த வார்த்தை ரொம்பவே பிடித்திருந்தது. புத்தகத்தின் அனைத்து இடங்களிலுமே வரம் என்றே குறிப்பிட்டு இருந்தீர்கள். அவர் உண்மையிலேயே கடவுள் உங்களுக்குக் கொடுத்த வரம்தான்” எனப் பாராட்டினார்.