

'கே.டி.' படத்துக்குத் திரையரங்குகள் குறைந்தது தொடர்பாக இயக்குநர் மதுமிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுமிதா இயக்கத்தில் பேராசிரியர் மு.ராமசாமி, நாக விஷால் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் 'கே.டி. (எ) கருப்புதுரை'. கார்த்திகேய மூர்த்தி இசையமைத்துள்ள இந்தப் படத்தை விக்ரம் மெஹ்ரா மற்றும் சித்தார்த் ஆனந்த் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம் நவம்பர் 22-ம் தேதி தமிழகத்தில் வெளியானது.
விமர்சன ரீதியாகப் பலராலும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. ஆனாலும், போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு வெளியான படங்கள் கூட, விமர்சன ரீதியாகப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், 'கே.டி. (எ) கருப்புதுரை' படம் குறைவான திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக இயக்குநர் மதுமிதா தனது ட்விட்டர் பதிவில், "ஏன் 'கே.டி.' படத்துக்கான திரைகள் குறைவாக உள்ளன. அதே நேரத்தில் மக்கள் சுமாராக இருக்கிறது என்று சொன்ன படங்கள் அதிக திரைகளில் உள்ளன. அது ஏன் என்று யாராவது எனக்கு விளக்க முடியுமா? கே.டி.க்கு நிறைய திரைகள் தேவை. மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு. எனவே மக்களே, தயவுசெய்து நான் புரிந்துகொள்ள உதவுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.