

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'கபாலி' படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை, ஆனால் படத்தின் தலைப்புக்கான பிரச்சினை தொடங்கி இருக்கிறது.
தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு 'கபாலி' என்று திங்கள்கிழமை மாலை இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பகக்த்தில் அறிவித்தார்.
'கபாலி' தலைப்பு அறிவிப்பு குறித்து ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி தீர்த்த, அதே வேளையில் படத்தின் தலைப்புக்கான பிரச்சினை தொடங்கியிருக்கிறது.
ஏற்கெனவே 'கபாலி' என்ற பெயரில் புதுமுகங்கள் நடித்திருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இப்படத்தின் இசையை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டு இருக்கிறார்.
சிவா பிக்சர்ஸ் என்ற பெயரில் 'கபாலி' படத்தை தயாரித்திருக்கும் சிவகுமாரிடம் பேசிய போது, "எனக்கு என்ன பேசுவது, என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்னும் 6 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படமும் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆனால், இச்சமயத்தில் 'கபாலி' என்று ரஜினி படத்தின் பெயர் அறிவித்திருக்கிறார்கள்.
கடந்த 6 மாத காலமாக, 'கபாலி' என்ற தலைப்பை புதுப்பிக்க கேட்டு வருகிறேன். தேர்தல் வேலை இருக்கிறது, அப்புறம் வாருங்கள் என்று கூறி என்னை அலைக்கழித்துவிட்டார்கள். பல லட்சங்கள் செலவழித்து படமெடுத்த எனக்கு 500 ருபாய் கொடுத்து விண்ணப்பிக்க தெரியாதா?
அதே வேளையில், முன்பே சிவா பிக்சர்ஸ் என்ற பெயரில் தலைப்பை ஏன் புதுப்பிக்கவில்லை என்று புகாரும் அளித்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.