

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது. பல்வேறு இயக்குநர்கள் 'பொன்னியின் செல்வன்' கதையை இயக்குவது என முயற்சி செய்து நடக்கவில்லை. இம்முறை இயக்கியே தீருவது என்று தீவிர முனைப்பு காட்டி வருகிறார் மணிரத்னம்.
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆனால், படக்குழு இன்னும் யாருடைய பெயரையும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. தற்போது, இந்தக் கூட்டணியில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான லால் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தின் முன்னணி நடிகர்களோடு இணைந்து வாள் பயிற்சியும், குதிரைப் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் லால். மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'கடல்' படத்திலேயே லால் நடிக்க வேண்டியது. தேதிகள் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை மலையாளத் திரையுலகின் முன்னணி இணையதளத்துக்கு அளித்த பேட்டியொன்றில் லால் உறுதிப்படுத்தியுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக வைரமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.