

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் இளையராஜா (72) இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனலை தொடங்கினார், இளையராஜா. அன்று இரவு திடீரென அவருக்கு சோர்வு ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதய ரத்த ஓட்டத்தில் பிரச்சினை இருந்ததால் அவருக்கு அங்கே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
அதன்பிறகு தனது அலுவலகத்துக்கு சென்ற அவர் உடனடியாக திரைப்பட இசையமைப்பு பணிகளையும் கவனிக்கத் தொடங்கியுள்ளார்.