

அமீர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அமீர். கல்லூரி மாணவராக மிகச்சிறிய வேடத்தில் அந்தப் படத்தில் நடித்தார் அமீர்.
பின்னர், சூர்யா நடிப்பில் ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2002-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், த்ரிஷா ஹீரோயினாக நடித்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டது. மேலும், தெலுங்கில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
தொடர்ந்து ‘ராம்’, ‘பருத்தி வீரன்’, ‘ஆதி பகவன்’ ஆகிய படங்களை இயக்கிய அமீர், ‘யோகி’, ‘யுத்தம் செய்’, ‘நினைத்தது யாரோ’ மற்றும் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடிக்கவும் செய்தார்.
இந்நிலையில், அவர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வி.இஸட்.துரை இந்தப் படத்தை இயக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அஜயன் பாலா வசனம் எழுதும் இந்தப் படத்தை, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கிறார்.
இன்று (டிசம்பர் 3) முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரைப் பார்க்கையில், அரசியலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகும் எனத் தெரிகிறது.