மூன்றாவது திருமணம் குறித்த வதந்தி: ‘பிக் பாஸ்’ ரேஷ்மா விளக்கம்

மூன்றாவது திருமணம் குறித்த வதந்தி: ‘பிக் பாஸ்’ ரேஷ்மா விளக்கம்
Updated on
1 min read

மூன்றாம் முறையாகத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரேஷ்மா.

லக்‌ஷ்மண் குமார் இயக்கிய ‘மசாலா படம்’ மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மா. அதைத் தொடர்ந்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் சூரி ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். ‘புஷ்பா புருஷன்’ எனும் டயலாக், அந்தப் படத்தில் பயங்கர ஹிட்டானது. தொடர்ந்து ‘கோ 2’, ‘மணல் கயிறு 2’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பின்னர், கடந்த ஜூன் மாதம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில், போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதில், தன்னுடைய சோகக்கதைகளைச் சொல்லி, பெரும்பாலானவர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ரேஷ்மாவுக்கு, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் முதல் திருமணம் நடைபெற்றது. அந்த வாழ்க்கை சில வருடங்களில் கசக்க, கணவரைப் பிரிந்தார். பின்னர், அமெரிக்காவில் வசித்தபோது, அங்கு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான்.

ஆனால், இரண்டாவது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் ரேஷ்மா. அப்போதுதான் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், ரேஷ்மா மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது. தன்னுடைய நண்பர் நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரேஷ்மா, ‘வாழ்க்கை மிகக் குறுகியது. உங்களைச் சிரிக்க வைப்பவர்களுடனும், அன்பு செலுத்துபவர்களுடனும் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள்’ என கேப்ஷன் கொடுத்ததுதான் இந்த வதந்திக்குக் காரணம் எனத் தெரிகிறது.

எனவே, இந்த வதந்தி குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் ரேஷ்மா. “எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை, வெறும் ஊகங்களே... என்னைப் பற்றிய தவறான விஷயங்களைத் தயவுசெய்து பரப்ப வேண்டாம். நன்றி” எனத் தெரிவித்துள்ளார் ரேஷ்மா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in