சிவகார்த்திகேயனை இயக்குவது சந்தோஷம்! - நெல்சன் நேர்காணல்

சிவகார்த்திகேயனை இயக்குவது சந்தோஷம்! - நெல்சன் நேர்காணல்
Updated on
1 min read

‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன். விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் இயக்கியபோது, உதவி இயக்குநர்களாக பணி புரிந்தவர்கள் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் நெல்சன். அந்த மகிழ்ச்சியில் இருந்தவருடன் ஒரு நேர்காணல்..

சிவகார்த்திகேயன் படம் என்ன கதைக்களம்?

ஆக்‌ஷன், திரில்லர், நகைச்சுவை என அனைத்தும் அடங்கியகதை. ‘டாக்டர்’ என்று தலைப்பிட்டுள்ளோம். தெலுங்கில் ‘கேங் லீடர்’ படத்தில் நடித்த பிரியங்கா, தமிழில் இந்த படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் யோகி பாபு, இளவரசு, வினய், அர்ச்சனா, ‘கோலமாவு கோகிலா’ டோனி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. சென்னை, கோவாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த படத்துக்கு விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த கூட்டணி எப்படி உருவானது?

விஜய் டிவியில் பணியாற்றிய போதே சிவகார்த்திகேயனை தெரியும். அதுமுதல் கடந்த 12 ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்கிறது. வருங்காலத்தில் நாம் இணைந்து ஒரு படம் பண்ணனும் என்று அடிக்கடி பேசுவோம். ‘கோலமாவு கோகிலா’ படத்துக்குப் பிறகு, அவருக்கேற்ற கதையும் அமைந்தது. கதையை அவரிடம் சொன்னேன்.. உடனே ஓ.கே சொன்னார்.. படத்தை தொடங்கிட்டோம்.

உங்களிடம் உதவி இயக்குநராக இருந்த சிவகார்த்திகேயனை இயக்கப்போவது குறித்து..

ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். ஆரம்பத்தில் இருந்தே அவரை ரொம்ப பிடிக்கும். எம்பிஏ படித்துவிட்டுதான் விஜய் டிவிக்கு வேலைக்கு வந்தார். மற்றவர்கள் போல ‘ஸ்டாண்ட் அப் காமெடி’பண்ணமாட்டார். வித்தியாசமானவர். பணிவானவர்.

நல்ல புத்திசாலி. பயங்கர உழைப்பாளி. என்னிடம் பணியாற்றியவர்களில் இன்று அபார வளர்ச்சி அடைந்திருப்பது அவர்தான். அவரது உழைப்புக்கேற்ற விஷயங்களும் சரியாக அமைந்தன. ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இருவரும் பேசாமல் இருந்ததே கிடையாது. படத்துக்கு போகும்போது கூட்டிட்டுப் போவார். அவரது கஷ்டம், சந்தோஷம் எல்லாம் எனக்கு தெரியும்.

‘கனா’ படத்தில் ‘நெல்சன் திலீப்குமார்’ என்ற உங்கள் பெயரைத்தான் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் வைத்திருந்தார். அதுபற்றி..

இதுபோல ஏதோ செய்யப்போகிறார்கள் என்று தெரியும். நல்ல பெயராக இருப்பதால் வைத்துள்ளீர்களா என்று அவர்களிடம் கேட்டேன். நம் மீது ஒரு சின்ன மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்தேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in