

அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து, தான் இயக்கிய ‘சிங் ஈஸ் ப்லிங்’ இந்தி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கிறார் பிரபுதேவா. இதற்கிடையே சமீபத்தில் அவர் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு மற்றும் அதுதொடர்பான பணிகளுக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து சில நாட்கள் வட்டமடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை சந்தித்துப் பேசியதில் இருந்து..
நீங்கள் புதிதாக தொடங்கியிருக்கும் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ பற்றி..
தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நீண்ட நாள் திட்டம் எதுவும் இல்லை. திடீரென யோசனை வந்தது. நினைத்தபடி சரியாக செயல்படுத்தவும் முடிந்திருக்கிறது. கடவுளுக்கு நன்றி. எனக்கு பிடித்த மாதிரியான கதைகள், பொழுதுபோக்கு விஷயங்கள், ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒருவித புதுமை இப்படியான கதைகளைத்தான் தொடர்ந்து தேர்வு செய்யும் எண்ணம் உள்ளது. அதேநேரம், பெரிய ஹீரோக்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு, வரவேற்பு இங்கு இருக்கிறது. அதற்கேற்ற படத்தை கொடுக்கும் திட்டமும் உள்ளது. அந்த வகையில், பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து முதன்முதலாக தயாரிக்கிறேன். காஞ்சிபுரத்தின் பின்னணியில் உருவாகும் படம் இது. பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணிபுரிகிறார்கள். அடுத்து ஜெயம்ரவி படம். அதை லஷ்மண் இயக்குகிறார். 3-வதாக, அறிமுக இயக்குநர் விக்டர் சொன்ன கதை ரொம்ப ஈர்த்தது. ‘முதல் கட்ட படப்பிடிப்பு இவ்ளோ நாட்களில் முடிப்போம். இப் போது ஹீரோ 65 கிலோ இருப்பார். அடுத்தகட்ட படப் பிடிப்பில் ஹீரோ 80 கிலோ இருப்பார்’ என்றார். கதை சொல் லும்போதே புதுமையாகத் தெரிந்தது. இந்த 3 கதைகளையும் படமாக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளோம்.
உங்கள் இயக்கத்தில் இந்தியில் வெளிவரவிருக்கும் ‘சிங் ஈஸ் ப்லிங்’ படத்தின் ரிலீஸ் வேலைகளை தொடங்கிவிட்டீர்கள்போல?
இன்னும் 2 நாள் படப்பிடிப்புதான் பாக்கி. அக்டோபர் 2 ரிலீஸ். டிரெய்லர் கட் வேலை நடந்துகொண்டிருக் கிறது. பஞ்சாப், மும்பை, கோவா, ருமேனியா உட்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.
என்ன கதை?
‘அன்பே வா’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’ பார்த்திருக்கீங்களா.. அந்த பாணி கதை. 80 சதவீதம் காமெடி. நாயகன் பஞ்சாபி. அவருக்கு ஆங்கிலம் தெரியாது. நாயகி ருமேனியா. அவருக்கு இந்தி தெரியாது. இருவரும் கோவாவில் சந்திக்கின்றனர். இவர்களோடு லாரா தத்தாவும் அழகான ரோலில் நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் மோதும் சண்டைக் காட்சி களும் உண்டு. இன்னொரு சிறப்பு, இசை. முதன்முறையாக 4 இசை யமைப்பாளர்களைக் கொண்டு பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உங்களது முந்தைய படம் ‘ஆக்ஷன் ஜாக்சன்’ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லையே?
அந்த படத்துக்கும் நன்குதான் உழைத்தோம். எங்கோ தவறு நடந்திருக்கிறது. அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்தடுத்து செய்யும்போது புதுமையாக, வித்தியாசமாக மட்டுமின்றி, மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக செய்ய வேண்டும் என்று புரியவைத்த அனுபவமாகத்தான் அதை எடுத்துக்கொள்கிறேன்.
தென்னிந்திய சினிமாவுக்காக தயாரான நீங்கள், இந்தி நட்சத்திரங்களோடு இணைந்து செயல்பட்டு, பாலிவுட்டிலும் உங்களுக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதன் ரகசியம் என்ன?
முதலில் ஒரு டான்ஸராகத்தான் எல்லோருக்கும் என்னை தெரியும். இந்தியில் நான் இயக்கிய ‘வான்ட்டட்’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நட்பானவர். சல்மான் கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் இப்படி நாடு முழுக்க இருக்கும் நட்சத்திரங்கள் பலரும் என்னை முதலில் ஒரு டான்ஸராகத்தான் பார்க்கின்றனர். அதில்தான் எனக்கும் சந்தோஷம். நான் முழுக்க முழுக்க ஒரு டான்ஸர். மற்ற பணிகள் ஒரு அங்கம்தான்.
ராஜேஷ்குமார் நாவலை படமாக்குவது, கமல் படத்தை இயக்கும் திட்டம் என்ன ஆனது?
அது மிகப் பெரிய வேலை. எப்போது நடக்கும் என்று சொல்லமுடியாது. படம் இயக்குவது குறித்து கமல் சாரை சந்தித்து பேசினேன். அதுவும் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. அவர் மிகப் பெரிய மனிதர். இதுபற்றி அவர்தான் முடிவு சொல்ல வேண்டும்.
உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நீங்களே நடித்து, படம் இயக்குவது எப்போது?
அது சரியாக வருமா என்று முதலில் முடிவு செய்யணும். அப்படி ஒரு எண்ணம் இதுவரை வரவில்லை. நடிப்பு வேறு, இயக்கம் வேறு, தயாரிப்பு வேறு. மூன்றையும் ஒன்றாக ஆக்கிக்கொள்ளக்கூடாது. இப்போதைக்கு, என்னை சுற்றியிருக்கும் திறமைசாலிகளுக்காகத்தான் இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் விஷயத்தை பிறகு பார்க்கலாம்.
உங்களிடம் உதவியாளராக இருந்த நடன இயக்குநர்கள் திரையுலகில் இன்று பரபரப்பாக இருக்கிறார்கள். ஆனாலும், ஒவ்வொரு இடத்திலும் உங்களைத்தான் கொண்டாடுகின்றனர். அது என்ன மாயம்?
அப்பா டான்ஸ் மாஸ்டராக இருந்ததால் 16 வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். என்னிடம் பயிற்சி பெற்ற பலருக்கும் கிட்டத்தட்ட என் வயது இருக்கும். அவர்கள் எல்லோருமே தங்களது முயற்சி, உழைப்பால் முன்னுக்கு வந்தார்கள். நான் மட்டுமே அவர்களை உருவாக்கினேன் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அவர்கள் திறமைசாலிகள். நல்ல உயரத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.
அடுத்து என்ன படம் இயக்குகிறீர்கள்?
இந்தியில் பாலாஜி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்ய வேண்டும். அதற்கான கதையை முடிக்கும் வேலைகள், நடிகர்கள் தேர்வு நடக்கிறது. கூடவே, இரண்டு, மூன்று கதை விவாதங்களும் நடந்துவருகிறது.