

கிண்டலுக்கு ஆளான 'ஆம்பள' காட்சியின் பின்னணி குறித்தும், படம் குறித்தும் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
2015-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் 'ஆம்பள'. விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்த இந்தப் படத்தில் விஷால், பிரபு, ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், சந்தானம், சதீஷ், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது இந்தப் படம்.
இந்தப் படத்தில் விஷால் ஒரு சண்டைக் காட்சியில், சுமோ மீது அமர்ந்து கொண்டிருப்பார். அந்த சுமோ அந்தரத்தில் பறந்து வந்து, இறங்கி அதிலிருந்து சண்டைக் காட்சி தொடங்கும். விஷால் சுமோவில் பறந்து வரும் காட்சி கடும் கிண்டலுக்கு ஆளானது. மேலும், தற்போது வரை மீம்ஸ் கிரியேட்டர்கள் மத்தியில் அந்தப் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தக் கிண்டல் தொடர்பாக முதன் முறையாக பேட்டியொன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. அதில், "நான் பண்ணியது ஸ்பூஃப் தான். எத்தனையோ படங்களில் ஜீப் எல்லாம் பறக்கும். அதை வைத்து காமெடிதான் பண்ணினேன். அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கிண்டல் செய்தார்கள். 'ஆம்பள' படமே ஸ்பூஃப் தான். அந்தப் படத்தில் வைபவ்தான் பிரபுவின் பையன் என்பதை பிரபு - விஷால் ஆகிய இருவருமே கண்டுபிடிப்பார்கள். அதற்கு ஒரு காட்சி வைத்திருப்பேன். என்னவென்றால், எல்லாருமே சரக்கு ஊற்றிவிட்டுத் தான் தண்ணீர் ஊற்றுவார்கள். இவன் மட்டும் தண்ணீர் ஊற்றிவிட்டு, சரக்கு ஊத்துறான். உங்களை மாதிரி. அதனால் இவன் தான் உங்க பையன் என்பார்கள்.
'ஆம்பள' படத்தின் ஆம்பள.. ஆம்பள பாடலை வைத்து ஸ்பூஃப் பண்ணும்போது எனக்கே சிரிப்பாக இருக்கும். அதுவே ஒரு ஸ்பூஃப் படம் என்று. ஒருவேளை என் மீது தவறு இருக்கலாம். அதுவொரு ஸ்பூஃப் படம் என்று தெரியும் அளவுக்கு நான் எடுக்கவில்லையோ என்னவோ. அனைத்து கமர்ஷியல் படங்களையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம்தான் 'ஆம்பள'. அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் கனல் கண்ணனை வைத்து காமெடி பண்ணியிருப்போம். சந்தானம்தான் ரொம்ப சீரியஸாக போலீஸ் உடையில் இருப்பார்.
'தமிழ்ப் படம்' என்பது அனைத்து தமிழ்ப் படங்களையும் ஸ்பூஃப் பண்றோம் எனச் சொல்லி எடுக்கப்பட்ட படம். நான் ஒரு காமெடி படத்துக்குள் இதெல்லாம் பண்ணலாம் என எடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி.
தற்போது 'ஆக்ஷன்' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி.