'வர்மா' என்ன பிரச்சினை? - மனம் திறக்கும் 'ஆதித்ய வர்மா' இயக்குநர்

'வர்மா' என்ன பிரச்சினை? - மனம் திறக்கும் 'ஆதித்ய வர்மா' இயக்குநர்
Updated on
1 min read

'வர்மா' படத்தில் என்ன பிரச்சினை என்று 'ஆதித்ய வர்மா' இயக்குநர் கிரிசாயா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

கிரிசாயா இயக்கத்தில் த்ருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆதித்ய வர்மா'. இது தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காகும். 'ஆதித்ய வர்மா' உருவாவதற்கு முன்பு, இந்த ரீமேக்கை 'வர்மா' என்ற பெயரில் இயக்கினார் பாலா. அதில் த்ருவ் விக்ரம், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் அதன் இறுதி வடிவம் சரிவரத் திருப்தி தராததால், அந்தப் படத்தைக் கைவிட்டுவிட்டார்கள்.

பின்பு, 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாயா இயக்கத்தில் 'ஆதித்ய வர்மா' படம் உருவானது. தற்போது 'வர்மா' படத்திலும், அதன் ட்ரெய்லரிலும் இருந்த பிரச்சினை என்ன என்பதை 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் கிரிசாயா.

அதில், "'வர்மா' ட்ரெய்லரைப் பார்த்தபோது, 'அர்ஜுன் ரெட்டி' படப்பிடிப்பில் எனக்குக் கிடைத்த உணர்வு கிடைக்கவில்லை. நான் இயக்குநர் பாலாவின் மிகப்பெரிய ரசிகன். 'பிதாமகன்', 'அவன் இவன்' படங்கள் என்னைப் பாதித்தவை. ஆனால் அந்த ட்ரெய்லர் எனக்குத் திருப்திகரமாக இல்லை. அது அவரது பார்வையில் உருவானது. வேறொருவர் இயக்கியிருந்தாலும் அது அவர்களின் பார்வையில் இருந்திருக்கும்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தோடு நெருங்கிய தொடர்பு இருக்கும் ஒருவர் இயக்க வேண்டும் என்று விக்ரம் விரும்பினார் என நினைக்கிறேன். நான் விக்ரமைச் சந்தித்தேன். முடிந்த படத்தில் என்ன குறைகிறது என்பதைப் பற்றி நாங்கள் உரையாடினோம். அதன் பின் புதிதான ஒரு அணுகுமுறையில் நாங்கள் தொடங்கினோம்.

தயாரிப்பாளர் நான் என்ன கேட்டாலும் கொடுத்தார். ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனுடன் நான் நல்ல அலைவரிசையில் இருந்தேன். நான் தேர்ந்தெடுத்த எந்த இடத்துக்கும் அவர் மறுப்பு சொல்லவில்லை. படத்தை முடிக்க எனக்கு 54 நாட்கள் தரப்பட்டன. நான் 55 நாட்களில் முடித்தேன்" என்று பதில் அளித்துள்ளார் இயக்குநர் கிரிசாயா.

'ஆதித்ய வர்மா' படதுக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு இருந்தது. படத்துக்கு நல்ல வசூல் கிடைத்தது. ஆனால், 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் அதன் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' அளவுக்கு மாபெரும் வசூல் வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in