

சூர்யாவுக்காக எழுதி வரும் கதையின் பின்னணியை வெளிப்படையாகப் பேட்டியொன்றில் இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், செந்தில் வீராசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. பல்வேறு தடங்கல்களைத் தாண்டி வேல்ஸ் நிறுவனம் அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்து படத்தை வெளியிட்டுள்ளது.
படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், வசூலில் குறைவில்லை என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். தொடர் மழையே கூட்டம் குறையக் காரணம் என்றும் குறிப்பிட்டார்கள். தற்போது வருண் நாயகனாக நடிக்கும் 'ஜோஷ்வா: இமை போல் காக்க' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். 2020-ல் காதலர் தினத்தன்று இப்படம் வெளியாகவுள்ளது.
'ஜோஷ்வா' படத்தைத் தொடர்ந்து அனுஷ்கா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இவ்விரண்டு படத்தையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்துக்காகக் கதை எழுதி வருவதாகப் பேட்டிகளில் தெரிவித்துள்ளார் கெளதம் மேனன்.
தற்போது சூர்யாவுக்காக எழுதி வரும் கதையின் பின்னணியைப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதில், ”நம்ம மக்களிடையே தானே போய்ச் சேரப் போகிறது என்பதால் சொல்கிறேன். கமல் - காதம்பரி என்ற இருவருடைய கதை எழுதி வருகிறேன். இருவரும் லண்டனில் சந்திக்கிறார்கள்.
இருவருமே இசையமைப்பாளர்கள், பாடகர்கள். இசையால் இருவரும் இணைகிறார்கள். பாடல், ராஜா சார் எனப் படம் பயணிக்கும். இருவரும் ஒன்று சேர்வார்களா என்பதுதான் கதை. இந்தக் கதை சூர்யாவுக்குப் பிடித்திருந்தால் இதுவொரு நல்ல படமாக அமையும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.