

பள்ளிக் கல்வித் துறை, ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய முத்தரப்பில் தேவைப்படும் மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் அழுத்தம் திருத்தமாகப் பேசியபடம் ‘சாட்டை’. அதன் தொடர்ச்சியாக இல்லாமல், அதில் கையாண்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியை, கல்லூரியைக் கதைக் களமாகக் கொண்டு பேசியிருக்கிறது அதே கூட்டணி.
ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்களுக்கு முக்கியத்துவம் தரும் தனியார் கல்லூரி அது. அதன் முதல்வரான தம்பி ராமையா, சாதி மனப்பான்மை கொண்டவர். இந்தபாரபட்சம், கல்லூரியின் பிற்போக்குத்தனங்கள், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை தமிழ்ப் பேராசிரியர் சமுத்திரக்கனி சுட்டிக் காட்டுகிறார். ‘மாணவர் சமூகத்துக்கு சாதி கிடையாது’ என்று எடுத்துக் கூறி, மாணவர்கள் இடையிலான விரிசலைத் துடைத்தெறிகிறார்.
மாணவர்களின் உரிமைகளைக் காக்கவும், தேவைகளைக் கேட்டுப் பெறவும் ‘மாணவர் நாடாளுமன்றம்’ அமைக்க அவர்களை ஊக்குவிக்கிறார். இதனால் தம்பி ராமையாவின் கோபம் தீவிரமடைகிறது. சமுத்திரக்கனியை கல்லூரியைவிட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார். அதில் தம்பி ராமையா ஜெயித்தாரா, கல்லூரியையும் மாணவர்களையும் சமுத்திரக்கனியால் மாற்ற முடிந்ததா என்பது மீதிக் கதை.இயக்குநர் என்ற நிலையில் இருந்து நடிகர் என்ற அடையாளத்தை சமுத்திரக்கனிக்கு கொடுத்த படங்களில் ஒன்று ‘சாட்டை’.
பெரும்பாலும், ஓர் ஆசிரியருக்குரிய தொனியுடனேயே அவரைப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள் பார்வையாளர்கள். அந்த அளவுக்கு, வசனங்களை நம்பிப் பயணிக்கும் கதாபாத்திரங்களை ‘ரெடிமேட்’ சட்டையாக அவருக்கு அணிவிக்கும் போக்கில் இந்த படம் இன்னும் கொஞ்சம் தீவிரம் காட்டியிருக்கிறது.
வறுமையான குடும்பச் சூழலில் இருந்து வரும் மாணவர்களின் பிரச்சினைகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து கல்லூரியில் அடிவைப்பவர்கள், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடு, கல்லூரிகளில் இருக்கும் உள்கட்டமைப்பு சிக்கல்கள், மாணவர்களை அடிமைபோல நடத்த விரும்பும் பேராசிரியர்களின் மனப்பாங்கு என பல்வேறு பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசியிருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
ஆசிரியர்கள் அனைவரையும் மோச மானவர்களாக காட்டாமல் நல்ல ஆசிரியர்களாகவும் சிலரை சித்தரித்திருப்பது ஆறுதல். ஆனால் இவற்றைத் தாண்டி மாணவர்கள் படிப்பில் கவனமின்றி இருப்பது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் மதிக்காமல் இருப்பது, தீய பழக்கங்களில் ஈடுபடுவது போன்ற மாணவர் தரப்புப் பிரச்சினைகளும் சமூகத்தின் எதார்த்தமாக இருக்கும்போது, படத்தில் அதுபற்றி துளியும் பேசப்படவில்லை. கல்லூரியின் அனைத்து மாணவர்களையுமே கல்வியில் அக்கறை உள்ளவர்களாகவும், வகுப்புகளில் ஒழுக்கமாக நடந்துகொள்வதாகவும் காண்பித்திருப்பதை ஏற்க முடியவில்லை.
சமுத்திரக்கனியின் வசன உச்சரிப்பு ரசிக்கத்தக்க வகையில் இருந்தாலும், எல்லா பிரச்சினைகளையும் அவர்பேசிப் பேசியே தீர்ப்பது அலுப்பைத் தருகிறது. அவர் பேசும் வசனங்களில் 80 சதவீதத்துக்கு மேல் கருத்துகள், அறிவுரைகளாகவே இருக்கின்றன. ‘சாட்டை’யில் இருந்ததுபோல ஒரு வலுவான கதை இல்லாமல் போனதால் திரைக்
கதையில் சுத்தமாக சுவாரஸ்யம் இல்லை.
ஓய்வுபெறப்போகும் பேராசிரியருக்கான பிரிவுபச்சார விழாவை மாணவர்களே ஒருங்கிணைப்பது, மாணவர் நாடாளுமன்றம் அமைப்பது போன்ற ஒரு சில ஐடியாக்கள், அதுதொடர்பான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கல்லூரி மாணவர்களின் உண்மையான பிரச்சினைகளைப் பேசும் சில வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.
மிடுக்கான ஆசிரியருக்கான உடல்மொழியுடன் தோன்றுகிறார் சமுத்திரக்கனி. மாணவர்களுடன் நட்பாகப் பேசிப் பழகும் ஆசிரியராக அவரை ரசிக்க முடிகிறது. உரக்கப் பேசியே எரிச்சலூட்டும் அதிகார அகம்பாவம் மிக்க கல்லூரி முதல்வராக எதிர்மறை கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் தம்பி ராமையா.
அதுல்யா ரவி துடிப்புமிக்க மாணவி கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறார். எளிய பின்னணியில் இருந்துவருபவர், இலங்கை அகதி மாணவர், யுவன் என மாணவர்களாக நடித்திருப்பவர்களும், அலுவலக உதவியாளராக வரும் ஜார்ஜ் மரியானும் கவனம் ஈர்க்கின்றனர்.
ஒளிப்பதிவுக்கு பெரிய வேலை இல்லை. ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.உயர்கல்வியில், கல்லூரிச் சூழலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதியச் சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு எதிராகச் சாட்டை சுழற்றுவதில் கவர்ந்தாலும் அழுத்தமான கதை, திரைக்கதை அமையாமல் போனதில், இது வெறும் கருத்துக் குவியல்.