லெஜண்ட் சரவணனுடன் நடிக்கவுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு

லெஜண்ட் சரவணனுடன் நடிக்கவுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

லெஜண்ட் சரவணனுடன் நடிக்கவுள்ளவர்களைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தனது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் லெஜண்ட் சரவணன். அவருக்குத் திரையுலகில் நாயகனாக நடிக்கும் ஆசையும் வந்தது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். இறுதியாகத் தனது கடைகளின் விளம்பரங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இணை இயக்க ஒப்பந்தமானார்கள்.

லெஜண்ட் சரவணனே நாயகனாக நடித்து, தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. ஏவிஎம் சரவணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைக்க, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் க்ளாப் அடித்து படப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.

லெஜண்ட் சரவணனுக்கு நாயகியாக பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், பலரும் மறுக்கவே, இறுதியாகப் புதுமுக நாயகி கீத்திகா திவாரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் மற்றொரு பிரபல நாயகியும் நடிக்கவுள்ளார் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் வெளிநாடுகளில் நடக்கவுள்ளது.

பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் லெஜண்ட் சரவணனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசன கர்த்தாவாகப் பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரியவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in