ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

Published on

'தம்பி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தம்பி'. டிசம்பர் 20-ம் தேதி வெளியாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (நவம்பர் 30) நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சூர்யா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சூர்யா பேசும் போது, ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.

இது தொடர்பாக சூர்யா பேசியதாவது:

“எனக்கு ரொம்ப நெருக்கமான படைப்பு இது. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் அனைவரும் இணைந்து பணிபுரிந்திருக்கிறார்கள். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமாக மாறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படியான படங்களை நம்பி கார்த்தி பண்ணுவது பெருமையாக இருக்கிறது.

கார்த்தி, ஜோ இருவருமே சிறந்த நடிகர்கள். கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது. 'நந்தா' படத்தில் மட்டும்தான் என்னால் அப்படி நடிக்க முடிந்தது. ஆனால், கார்த்தி கிளிசரின் போடாமல் அது அநாயசமாக பண்ணிடுவார். 'கைதி' படம் வரைக்குமே அதை பார்த்துட்டு இருக்கேன். ரொம்ப எளிதாகப் பண்ணிடுவார்.

'பாகுபலி' படம் அளவுக்கு பிரம்மாண்டமாக 'பாபநாசம்' படத்தை இந்தியளா முழுக்கக் கொண்டு போனவர் ஜீத்து ஜோசப். அவர் இந்தப் படத்தை இயக்கியிருப்பது சந்தோஷம். கோவிந்த் வசந்தாவை சந்தித்தபோது எப்படி இருந்தாரோ, இப்போதும் அப்படியே இருக்கிறார். பாடல்கள் ரொம்ப அருமையாக வந்துள்ளன. அதே போலத்தான் படமும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கடும் மழையிலும் இங்கு வந்திருக்கும் என் ரசிகர்களுக்கு நன்றி. சீக்கிரமாகவே நல்ல செய்தி சொல்கிறேன். அதேபோல் இங்கு வந்திருக்கும் கார்த்தியின் உறவுகளுக்கு (ரசிகர்கள்) இன்றைய சம்பவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாலை 3 மணி, 4 மணிக்கு எல்லாம் வண்டி ஓட்ட வேண்டாம். எவ்வளவு அவசரம் இருந்தாலும், அதிகாலை 3 மணிக்கு வண்டி ஓட்டும்போது நம்முடைய நினைவு இல்லாமல் சில விஷயங்கள் நடந்து விடுகின்றன. தயவுசெய்து அதைத் தவிர்த்துவிடுங்கள்”.

இவ்வாறு சூர்யா பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in