

விஜய் நடித்துவரும் ‘தளபதி 64’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருடைய 64-வது படம் என்பதால், தற்போதைக்கு ‘தளபதி 64’ என அழைக்கப்பட்டு வருகிறது. சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின்ராஜ் எடிட் செய்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு புதுடெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, டிசம்பர் 2-வது வாரத்தில் மூன்றாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்து தொடர்ச்சியாக புகைப்படங்கள், வீடியோக்கள் திருட்டுத்தனமாக வெளியாவதால், கவலையில் இருக்கிறது படக்குழு. எனவே, படப்பிடிப்புத் தளத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிஜிட்டல் உரிமையையும் சன் நெக்ஸ்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விஜய் படங்கள் தொடர்ச்சியாக அதிகம் வசூலித்து வருவதால், அதிக விலைக்கு தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவும் திட்டமிட்டு வருகின்றனர்.