

அஜித்துடன் மீண்டும் இணைந்து பணிபுரியும் ஆசை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.
கெளதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம், நேற்று (நவம்பர் 29) ரிலீஸானது. சில வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்தப் படம், பைனான்ஸ் பிரச்சினையால் தற்போதுதான் ரிலீஸாகியுள்ளது.
எனவே, இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பேட்டிகள் கொடுத்து வருகிறார் கெளதம் மேனன். அப்போது, ‘அஜித்துடன் மறுபடியும் எப்போது இணைந்து படம் பண்ணுவீர்கள்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “அஜித்துடன் ஒரு ரீமேக் படம் பண்ணத்தான் முதலில் என்னை அழைத்தனர். ஆனால், ‘என்னிடம் ஒரு கதை இருக்கிறது’ என்று சொன்னேன். ‘கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படம் மாதிரி ஒரு கதை என்றால் நான் பண்றேன்’ என முன்வந்தார் அஜித்.
எனவே, அவருக்காக சில காட்சிகளை வடிவமைத்தேன். ‘நீ இப்படியெல்லாம் பண்ண மாட்டியே... தேவையில்லாமல் ஏன் இந்த வசனம்?’ எனக் கேட்டு அவற்றைத் திருத்தினார். அருண் விஜய்யைப் படத்துக்குள் கொண்டு வருவது முதற்கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்தார்.
‘என்னை அறிந்தால்’ படத்தை மிக அழகாக நடித்துக் கொடுத்தார். அவருடன் படம் பண்ணும்போது இருந்த நட்பு மிக அழகானது. அதன்பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
அஜித், அவருடைய உலகத்தில் இருக்கிறார். அவரைத் தொந்தரவு பண்ணக்கூடாது என நினைப்பேன். அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரியும் ஆசை இருக்கிறது. அப்படி இணைந்தால், அது கண்டிப்பாக ‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும்” எனப் பதில் அளித்தார் கெளதம் மேனன்.
‘என்னை அறிந்தால்’ படம், கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. அஜித் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா இருவரும் நடித்தனர். வில்லனாக நடித்த அருண் விஜய் ஜோடியாக பார்வதி நாயர் நடித்தார். ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்துக்கு, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.