ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி
Updated on
1 min read

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில், பிரதான பாத்திரத்தில் பிந்து மாதவி நடிக்கிறார்.

விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. அடுத்ததாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்றது இந்தப் படம்.

தற்போது தன்னுடைய மூன்றாவது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், பிந்து மாதவி மற்றும் தர்ஷணா பனிக் இருவரும் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த 28-ம் தேதி பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தை, Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

“ரஞ்சித் ஜெயக்கொடி, தனித்தன்மை வாய்ந்த கதைகளைத் தேர்வுசெய்து, விறுவிறுப்பான படங்களாகக் கொடுப்பதில் வல்லவர். அவரது இயக்கத்தில் நான் படம் தயாரிக்க இதுவே முதல் காரணம். மேலும், தன் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய களத்தில் கட்டமைக்கப்பட்ட கதை ஒன்றை விவரித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகப்பட்டது.

பெண்களை மையப்படுத்திய இந்தப் படம், முழுக்க முழுக்க த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. ரசிகர்களை இருக்கை நுனிக்கே இழுத்து வந்துவிடும் காட்சிகள் நிரம்பவே உண்டு. கதையை அவர் சொன்ன விதம், விஷுவல் காட்சிகளுடன் முழுப்படத்தையும் எப்போது பார்ப்போம் என்ற ஆவலை என்னுள் ஏற்படுத்தியது.

ரஞ்சித் ஜெயக்கொடி, தான் உருவாக்கிய பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களை சரியாகத் தேர்ந்தெடுப்பார் என்று நம்புவதுடன், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் அனுபவத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்” என்கிறார் தயாரிப்பாளர் தேவராஜூலு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in