

'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக் கூடாது என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வணிக வரித்துறை செயலாளருக்கு அந்த அமைப்பு மனு அனுப்பியுள்ளது.
அந்த மனுவில், "எங்கள் இயக்கம் லஞ்ச-ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்புக்காக செயல்பட்டு வருகிறது.
வருகிற 14-ம் தேதி வெளியாகவுள்ள 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மதுப்பழக்கத்தை மேலும் தூண்டுவதாக உள்ளது என்பதை அறிந்து இம்மனுவை அனுப்புகிறோம்.
V.S.O.P. என்பது ஒரு மதுபான வகையின் பெயர் என்று தெரிந்திருந்தும் இப்படத்தின் சுருக்கப்பெயர் V.S.O.P. என்று வருவதற்கு ஏதுவாக 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது இப்படம் மதுபான உற்பத்தியாளர்களின் நிதியுதவியாலும், தூண்டுதலாலும் எடுக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
படத்திலுள்ள பாடல் வரிகளில், "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.. ஊரிலுள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க" என்று வருகிறது.
நட்பு-மகிழ்ச்சி-படிப்பு இவை அனைத்தையும் குடிப்பழக்கத்தோடு தொடர்புபடுத்தும் விதமான காட்சிகள் இப்படத்தில் நிறைய உள்ளன.
பீர் குடித்துவிட்டு கதாநாயகர்கள் இருவர் மகிழ்ந்திரு என்று சொல்லும் காட்சி, தமிழக இளைஞர்களை மகிழ்ச்சியை நோக்கியல்ல மரணத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.
இதுபோன்ற படங்களுக்கு யு சான்றிதழ் அளித்ததே தவறானது. எனவே இளைஞர்கள், மாணவர்களைச் சீரழிக்கும் இதுபோன்ற படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
இப்படத்துக்கு ஏற்கெனவே வரிவிலக்கு அளித்திருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோருகிறோம்.
உங்கள் முடிவு வருங்காலத்தில் திரைப்படம் எடுப்பவர்கள் மதுப்பழக்கத்தை ஊக்குவிக்குமாறு காட்சிகள் வைப்பதற்கு தயக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
மதுக்காட்சிகள் வைத்தால் வரிவிலக்கு கிடைக்காது என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றால், கண்டிப்பாக மதுக்காட்சிகளை தவிர்த்துவிடுவார்கள்.
மேலும், எங்கள் கோரிக்கை என்பது இந்தக் குறிப்பிட்ட படத்துக்கு எதிரானது மட்டுமல்ல.
தமிழகத்தில் மதுவிலக்குப் போராட்டம் பற்றி எரியும் பிரச்சினையாக உள்ள சூழ்நிலையால் நீங்கள் நல்ல முடிவு எடுப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பதால் அரசுக்கு பலநூறு கோடிகள் வரி இழப்பு ஏற்படுகிறது, 1997-ல் ரூ.109 கோடியாக இருந்த கேளிக்கை வரி வருவாய் 10 ஆண்டுகள் கழித்து 2007-ல் ரூ.16 கோடியாக குறைந்துள்ளது என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கும் கூறியுள்ளது.