

கலர்ஸ் தமிழ் சேனலில் சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்ட அறிவிப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘மலர்’, ‘தறி’ ஆகிய சீரியல்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டதாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, சேனல் தரப்பில் கூறியதாவது: ஒரு மெகா தொடர் 5 ஆண்டுகள் ஒளிபரப்பாக வேண்டும் என்ற கலாச்சாரம் மலையேறிவிட்டது. இது வெப் சீரீஸ் காலம். ஒரு கதையின் போக்கு எந்த கட்டத்தில் முற்றுப்பெறுகிறதோ அதுபோதும் என்பதுதான் தற்போதைய நிலவரம்.
அந்த அடிப்படையில், ‘மலர்’, ‘தறி’ ஆகிய 2 தொடர்களின் கதைக்களமும் கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்தன. இந்த கதை நகர்வு, தொடர்ந்து சீரியல் பார்த்துவந்தவர்களுக்கு தெரியும். அதனால்தான் தேவையின்றி கதையை வளர்க்க வேண்டாம் என்று முடித்துக்கொண்டோம்.
இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் விரைவில் புதிய தொடர் குறித்த அறிவிப்பு இருக்கும். அதுவும், வெப் சீரீஸ் களம் போல, சில மாதங்கள் மட்டுமே நகர்கிற விறுவிறுப்பான கதைக்களமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.