

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் ஹிப்ஹாப், குரூப் வடிவமைத்தல், சினிமா ஸ்பெஷல், கிளாசிகல், கிளாசிகல் ஃபியூஷன் , நாட்டுப்புற நடனம் என பல்வேறு பரிணாமங்களில் திறமையாளர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
ரியோ ராஜ், ஆண்ரூஸ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடன இயக்குநர் சாண்டி, திவ்யதர்ஷினி (டிடி), மஹத், ஆல்யா மானசா, சுனிதா ஆகியோர் உள்ளனர்.
நிகழ்ச்சி அனுபவம் குறித்து நடன இயக்குநர் சாண்டி கூறும்போது, ‘‘முந்தைய சீசனில் இந்த நிகழ்ச்சியின் கேப்டனாக இருந்தேன். இப்போது நடுவர் குழுவில் இணைந்துள்ளேன்.
டிடி போல 20 ஆண்டுகால அனுபவம் மிக்கவரோடும், மானசா போன்ற நல்ல நடனக் கலைஞர்களோடும் இணைந்து பங்கேற்பது மகிழ்ச்சி. மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திறமையாளர்கள் பங்கேற்கின்றனர்.
வட இந்திய நடன ஸ்டைலை நம்மூரு திறமையாளர்கள் வெளிப்படுத்துவது பிரமிக்க வைக்கிறது. நிகழ்ச்சியில் வெற்றி - தோல்வி பற்றி கவலைப்படாமல் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் போட்டியாளர்களிடம் கூறுகிறேன்.
எப்போதும் என்னை சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக்கொள்வதுதான் என் வேலை. அதை இந்த நிகழ்ச்சியிலும் செய்து வருகிறேன்’’ என்றார்.