

விஷ்ணு விஷால் நடிப்பதாக இருந்த 'பெல்லி சூப்புலு' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிப்பது உறுதியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா, ரீது வர்மா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பெல்லி சூப்புலு’. தருண் பாஸ்கெர் இயக்கிய இந்தப் படம் ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்தது. பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்த இந்தப் படத்தை, தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தமிழில் தயாரிப்பதாக இருந்த இந்தப் படத்துக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. விஷ்ணு விஷால், தமன்னா இருவரும் நடிப்பதாக இருந்த இந்தப் படத்தை, செந்தில் வீராசாமி இயக்குவதாக இருந்தது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்குப் பிறகு படம் தொடர்பான எந்தவொரு தகவலுமே இல்லாமல் கைவிடப்பட்டது.
தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, படத்தின் ரீமேக் உரிமை கைமாறியுள்ளது. தமிழில் விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவரது நண்பரான கார்த்திக் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகரும், ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த்தும் பணிபுரியவுள்ளனர்.
தயாரிப்பாளர் யார், ஹரிஷ் கல்யாண் உடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.