

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்து வெளியான 'எல்.கே.ஜி' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையைத் தனது நண்பர்களுடன் அமர்ந்து உருவாக்கியிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. இந்தப் படத்தைத் தயாரித்த வேல்ஸ் நிறுவனம், ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன்வந்தது.
தன் நண்பர்களுடன் அமர்ந்து கதை மற்றும் திரைக்கதையை எழுதி முடித்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் படத்தில் அவரே நாயகனாக நடித்து இயக்கவும் முடிவு செய்தார். இந்தக் கதையைக் கேட்ட நயன்தாரா, அதில் மூக்குத்தி அம்மனாக நடிக்கச் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார். ஆர்.ஜே. பாலாஜி - என்.ஜே.சரவணன் இருவருமே 'எல்.கே.ஜி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நாகர்கோவிலில் இன்று (நவம்பர் 29) முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.