Published : 29 Nov 2019 16:35 pm

Updated : 29 Nov 2019 16:35 pm

 

Published : 29 Nov 2019 04:35 PM
Last Updated : 29 Nov 2019 04:35 PM

முதல் பார்வை: எனை நோக்கி பாயும் தோட்டா

enai-nokki-paayum-thotta-movie-review

சி.காவேரி மாணிக்கம்

காதலிக்காகவும் அண்ணனுக்காகவும் தனுஷ் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம்தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் இறுதியாண்டு படிக்கும் தனுஷுக்கு, அந்தக் கல்லூரியில் படப்பிடிப்புக்காக வரும் நடிகை மேகா ஆகாஷைப் பிடித்து விடுகிறது. முதல் பார்வையிலேயே தனுஷ் காதலில் விழ, மேகா ஆகாஷுக்கும் அவரைப் பிடித்து விடுகிறது. அப்புறமென்ன... இருவரும் அடிக்கடி உதடுகளைக் கவ்விக் கொள்கின்றனர்.

இன்னொரு பக்கம், தனுஷின் அண்ணனான சசிகுமார், பருவ வயதிலேயே காணாமல் போய்விடுகிறார். அவரை நினைத்துக் குடும்பமே வருந்துகிறது.

பெற்றோர் இல்லாத மேகா ஆகாஷ், வில்லனான செந்தில் வீராசாமியின் அரவணைப்பில் சின்ன வயதிலிருந்து வளர்கிறார். எனவே, மேகா ஆகாஷுக்கு விருப்பம் இல்லையென்றாலும், கட்டாயப்படுத்தி சினிமாவில் நடிக்க வைக்கிறார் செந்தில் வீராசாமி.

மேகாவை வைத்து நிறைய பணம் சம்பாதிப்பதோடு, அவரை அடையும் ஆசையும் செந்தில் வீராசாமிக்கு உள்ளது. இதைத் தெரிந்துகொண்ட தனுஷ், அவரிடமிருந்து மேகாவைக் காப்பாற்றித் தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார். ஆனாலும், அங்கும் வந்து மேகாவை இழுத்துச் செல்கிறார் செந்தில் வீராசாமி.

பின்னர், 4 வருடங்கள் கழித்து திடீரென மேகா ஆகாஷிடமிருந்து போன் வருகிறது. காணாமல் போன சசிகுமாருடன் தான் இருப்பதாகவும், அவர் பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதாகவும் கூறுகிறார். எனவே, அவர்களைக் காப்பாற்ற மும்பை செல்கிறார் தனுஷ்.

சிக்கலில் மாட்டிய சசிகுமாரை அவர் காப்பாற்றினாரா? தனுஷ் - மேகா ஆகாஷ் இணைந்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், தொழில்நுட்பக்குழு. ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா, எஸ்.ஆர்.கதிர் என மூன்று பேர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். லைட்டிங் மட்டுமின்றி, வித்தியாசமான கேமரா கோணங்கள் வியக்க வைக்கின்றன.

‘மறுவார்த்தை பேசாதே’, ‘விசிறி’ பாடல்களை இளைஞர்களின் தேசிய கீதமாக்கி வெற்றிகண்ட இசையமைப்பாளர் தர்புகா சிவா, பின்னணி இசையிலும் தன்னை நிரூபித்து, அதைத் தக்க வைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஒலிக்கலவை, சண்டைக் காட்சிகளும் சிறப்பாக உள்ளன.

தான் மிகச்சிறந்த நடிகன் என ரகு கதாபாத்திரத்தின் வழி மீண்டும் நிரூபித்துள்ளார் தனுஷ். ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் இவ்வளவு வித்தியாசம் காட்டி, அதிலும் சிறப்பாக ஸ்கோர் செய்ய இவரால் மட்டும் எப்படி முடிகிறது? என்ற ஆச்சர்யம் மேலோங்குகிறது. தன் அண்ணன் இறந்ததும், அவரது உடலைப் பார்க்கத் துடிக்கும் இடத்தில் கைதட்ட வைக்கிறார்.

நடிகை லேகா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ். இதுதான் அவர் கமிட்டான முதல் படம் என்பதால், நடிப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார். ‘பிடிக்காமத்தான் நடிக்குறேன்’ என படத்தில் அவர் பேசுவதுபோல் ஒரு வசனம் வரும். ஆனால், அதுதான் நிஜம் என நினைக்க வைக்கிறது அவருடைய நடிப்பு. ஆனால், ஒளிப்பதிவாளர்களின் லென்ஸ் வழியே மிக அழகாகத் தோன்றுகிறார்.

வில்லன் குபேந்திரன் கதாபாத்திரத்தில் செந்தில் வீராசாமி, அசரடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பின் நிறைய தமிழ்ப் படங்களில் அவரை வில்லனாகப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. கொஞ்ச நேரமே வந்தாலும், அட்வைஸ் சொல்லாமல் இயல்பாக நடித்துள்ளார் சசிகுமார். சுனைனா, வேல.ராமமூர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரும் படத்தில் இருக்கின்றனர்.

கெளதம் மேனனின் படங்களின் சிறப்பே, காதல் காட்சிகள்தான். பிரம்மச்சாரிகளுக்குக்கூட அவர் படங்களைப் பார்த்தபிறகு காதலிக்கும் ஆசை வரும். ஆனால், இந்தப் படத்தில் அது சுத்தமாக மிஸ்ஸிங். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்களில் காதலும், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் காதல் மட்டுமின்றி, அப்பா - மகன் உறவு என இரண்டு விதமான எமோஷன்களும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதுபோல், காதலுடன், அண்ணன் - தம்பி பாசம் என இரண்டு விதமான எமோஷன்களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு இருந்தும், ஒன்றைக்கூட கெளதம் மேனன் சிறப்பாகக் காட்சிப்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய குறை.

கெளதம் மேனன் மாடுலேஷனில், தனுஷின் வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது படம். ஆனால், எல்லாக் காட்சிகளிலும் இந்த வாய்ஸ் ஓவர் இடம்பெறுவது, ஒருகட்டத்துக்கு மேல் எரிச்சலாக இருக்கிறது. தனுஷின் குரல் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அமிர்தத்தையும் அளவுக்கு மீறி திங்க முடியாதல்லவா...

கெளதம் மேனன் இதுவரை எடுத்த படங்களில் இருந்து சில சில காட்சிகளைப் பிய்த்துப்போட்டு கலந்ததுபோன்ற உணர்வை இந்தப் படம் தருகிறது. அதேசமயம், சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு, கால இடைவெளி எதுவும் இந்தப் படத்தில் தெரியாமல் மிகத் திறமையாக எடிட் செய்துள்ளார் பிரவீன் ஆண்டனி.

படத்தில் தனுஷை நோக்கிப் பாய்ந்து வரும் ஒரு குண்டு, அவர்மீது படாமல், அவர் பெல்ட்டில் உள்ள பக்கிளில் பட்டுத் தெறிக்கும். அப்படி, எப்போதும் இதயத்தைத் தொடும் கெளதம் மேனன் படம், இந்த முறை எங்கெங்கோ சென்று இதயத்தைத் தொடாமலேயே கடந்து விடுகிறது.

ENAI NOKKI PAAYUM THOTTA movie reviewENAI NOKKI PAAYUM THOTTA movieENAI NOKKI PAAYUM THOTTAENAI NOKKI PAAYUM THOTTA reviewENPTENPT movieENPT reviewENPT movie reviewENPT dhanushENPT megha akashGautham menonஎனை நோக்கி பாயும் தோட்டாஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்எனை நோக்கி பாயும் தோட்டா படம் எப்படி இருக்குஎனை நோக்கி பாயும் தோட்டா முதல் பார்வைஎனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ்எனை நோக்கி பாயும் தோட்டா மேகா ஆகாஷ்கெளதம் மேனன்கெளதம் வாசுதேவ் மேனன்தர்புகா சிவாசெந்தில் வீராசாமி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author