

'கருத்துக்களை பதிவு செய்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் பேசியது சர்ச்சையானது. இதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'கருத்துக்களை பதிவுசெய்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசும் போது "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது பழமொழி. அதை படத்தில் ஜாலியாகச் சொல்லியிருப்போம். ஆனால், அது உண்மை தான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.
பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் சரியாக இருக்கும். ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். அவன் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததும் தவறு தான்” என்று பேசினார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவானது. இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சர்ச்சைத் தொடர்பாக பாக்யராஜ் அளித்துள்ள பேட்டியில், "பெண்கள் மத்தியில் எதிர்ப்பு என்பதை உருவாக்கி இருக்கிறார்கள். யாருமே அந்த மாதிரி நினைக்கவில்லை. நிறையப் பேர் எனக்கு தொலைபேசியில் உண்மையை ரொம்ப வெளிப்படையாக தெரிவித்திருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். அதில் தவறில்லை என பாராட்டியவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
'அண்ணா.. உங்களை நம்பித் தானே வந்தோம்' (பொள்ளாச்சி சம்பவத்தில்) என்று பெண்கள் அழுதது எனக்கு மனதிற்குள்ளே இருந்தது. ஆகையால், அந்த எமோஷனில் தான் பேசினேன். இவ்வளவு பெரிய தவறு நடக்க இடம் கொடுத்துவிட்டீர்களே... அவர்கள் தவறு செய்தது உண்மைதான். ஆனால், நீங்கள் அதற்கு இடம் கொடுத்துவிட்டீர்களே.. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்ததால் எவ்வளவு பெரிய பாதிப்பு வந்துவிட்டது. அதைத் தான் என் பேச்சில் சொன்னேன்.
நான் பேசியதைத் திரித்து, தவறு நடக்கவே காரணமே பெண்கள் தான் என்ற தலைப்பில் செய்தியாக்கிப் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்கள். தாய்க்குலங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்த நான் ஏன் அவர்களைக் காயப்படுத்தப் போகிறேன். பெண்கள் எந்தளவுக்கு மரியாதையாக இருப்பார்கள் என்று பேசினேன். அதை விடுத்துப் பரபரப்பாக ஆக வேண்டும், நிறையப் பேர் பார்க்க வேண்டும் என்றே பலரும் திரித்து வெளியிட்டுள்ளனர்.
இப்படி டி.ஆர்.பிக்காக நிறையப் பேர் மாற்றி மாற்றிப் போட்டு, நான் இப்போது விளக்கம் சொல்ல வேண்டிய அளவுக்கு வந்துவிட்டது. நாம் செய்வதை எல்லாம் பெண்கள் செய்துவிட்டால், பெண்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விடுகிறது அல்லவா. அவர்களை நாம் தாயாக மதிக்கிறோம். அனைத்து வீட்டுக்கும் கடவுள் செல்லமுடியாது என்பதால் தான், ஒவ்வொரு வீட்டுக்கும் தாயை படைத்திருக்கிறார் என்று சொல்கிறோம். ஒரு குடும்பத்துக்குப் பொறுப்பே பெண்கள் தான்.
தற்போது சில பெண்கள் ஏன் போனிலேயே இருக்கிறீர்கள் என்னும் போது இது ஆணாதிக்கம் என்கிறார்கள். அது ஆணாதிக்கம் அல்ல, அபிமானம், அக்கறை, மரியாதையில் தான் சொல்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் கே.பாக்யராஜ்