

சிவா இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளது தொடர்பாக நடிகர் சூரி தனக்கு இரட்டிப்பு சந்தோஷம் இருப்பதாகத் தெரிவித்தார்.
'தர்பார்' படத்தின் பணிகளை முடித்துவிட்டதால், சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ரஜினி கவனம் செலுத்தத் தொடங்கினார். டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் சூரி நடிக்கவுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியுடன் சூரி இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
ரஜினியுடன் நடிக்கவுள்ளது தொடர்பாக சூரியிடம் தொலைபேசியில் கேட்டபோது, "காலையில் இயக்குநர் இரா.சரவணன் அண்ணன் படம் நல்லபடியாக தொடங்கியிருக்கு. மாலையில் ரஜினி சார் - சிவா சிவா சார் இணையும் படத்தின் அறிவிப்பு. இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கேன்.
சினிமாவில் வேலை செய்யும் லைட்மேன், மேக்கப் மேன் என டெக்னீஷியன் தொடங்கி நடிகர்கள் வரை அனைவருக்குமே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். சினிமாவுக்குள் வந்தவுடனே கனவு என்னவா இருக்கும் என்று பார்த்தீர்கள் என்றால், எப்படியாவது சூப்பர் ஸ்டார் படத்தில் தட்டு கழுவிவிட வேண்டும் என்று புரொடக்ஷனில் வேலை செய்கிறவர்கள் நினைப்பார்கள்.
சூப்பர் ஸ்டார் படத்தில் லைட் பிடித்துவிட மாட்டோமா என்று லைட்மேன் நினைப்பார். இப்படி அனைவருடைய கனவு மாதிரிதான் என்னுடைய கனவும் இருந்தது. எப்படியாவது ரஜினி சாரோடு ஒரு படம் நடிச்சுடணும்னு நினைச்சுட்டே இருந்தேன். என்றைக்காவது ஒரு நாள் போன் வந்திடாதா என்று ஏங்கியிருக்கேன்.
அந்த அழைப்பு இயக்குநர் சிவா சார்கிட்ட இருந்து வந்துச்சு. எனக்கோ இரட்டிப்பு சந்தோஷம். ஏன்னா ரஜினி சார் படம் மட்டுமல்ல, எனக்குப் பிடிச்ச இயக்குநர் சிவா சார் படமும் கூட அவ்வளவு சந்தோஷம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிற அடுத்டுத்த படங்கள்ல வேற நடிக்கிறேன். இப்படி அனைத்துமே ஒரே படத்துல அமையுறது கஷ்டம். எனக்கு அமைஞ்சுருக்கு என்றால் எவ்வளவு கொடுத்து வைச்சுருக்கேன்னு பாருங்க.
ரஜினி சார் படத்துல நடிக்கப் போறேன்னு வீட்டுல ரொம்ப காட்டிக்கல. இப்போ தானே வந்துருக்கு. இனிமேல் தான் சொல்லணும். ஏன்னா 2 நாளுக்கு முன்னாடி தான் சைன் பண்ணினேன். ரொம்ப சந்தோஷம் அண்ணே" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சூரி.