Published : 29 Nov 2019 11:15 AM
Last Updated : 29 Nov 2019 11:15 AM

முதல் பார்வை: அடுத்த சாட்டை

சி.காவேரி மாணிக்கம்

அட்வைஸ் எனும் சாட்டை கொண்டு மாணவர்களின் பிரச்சினைகளை சமுத்திரக்கனி களைவதுதான் ‘அடுத்த சாட்டை’.

தனியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் சமுத்திரக்கனி. அந்தக் கல்லூரியின் முதல்வரான தம்பி ராமையாவுக்கு, சமுத்திரக்கனியைக் கண்டாலே பிடிக்காது. காரணம், மாணவர்கள் நலன் கருதி சமுத்திரக்கனி செய்யும் செயல்கள், அவருக்குப் பிடிப்பதில்லை.

இரண்டு சாதி மாணவர்கள் பெருவாரியாகப் பயிலும் அந்தக் கல்லூரியில், தங்கள் சாதியை அடையாளப்படுத்த இரண்டு விதமான நிறங்கள் கொண்ட கயிறுகளைக் கையில் கட்டிக் கொள்கின்றனர் மாணவர்கள். இன்னொரு பக்கம், மாணவர்களைச் சரிவர கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம், அவர்களுக்குச் சரியாகக் கற்றுக் கொடுக்காத சில பேராசிரியர்கள், இந்தியக் கல்வி முறை...

இப்படி எல்லாப் பிரச்சினைகளையும், நியாயமான சில பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் துணையோடு தனியொரு மனிதனாய் சமுத்திரக்கனி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

‘சாட்டை’ படத்தை இயக்கிய அன்பழகனும், ‘அப்பா’ படத்தை இயக்கிய சமுத்திரக்கனியும் சேர்ந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். எனவே, இரண்டு படங்களையும் ஒன்றாக மிக்ஸிங் செய்தது போல் ‘அடுத்த சாட்டை’ படத்தின் திரைக்கதை உள்ளது.

எழுத்து போடும்போது படத்தின் ஆரம்பத்தில் தொடங்கும் அட்வைஸ், படம் முடியும்வரை தொடர்வது சோதனையிலும் சோதனை. ‘சமுத்திரக்கனியின் சாட்டை மொழிகள்’ என புத்தகம் போடும் அளவுக்கு அட்வைஸாக அள்ளி வீசுகிறார் சமுத்திரக்கனி. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஏதாவது ஒன்றை மேற்கோள் காட்டி ஒரு பன்ச் டயலாக் பேசினால் போதும், சம்பந்தப்பட்ட நபர் திருந்திவிடுகிறார்.

எனவே, புதிது புதிதாக பிரச்சினைகள் முளைக்க, எல்லாப் பிரச்சினைகளையும் டயலாக் பேசியே தீர்த்துவிடும் சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது, உயிருடன் இருக்கும்போதே மெரினாவில் சிலை வைக்கலாம் என்று தோன்றுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் சாகசம் காட்டும் ‘சூப்பர் ஹீரோ’ படங்களில் கூட, இவ்வளவு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்களா எனத் தெரியவில்லை.

காந்தி வழியில் அஹிம்சையாக அட்வைஸ் செய்யும் சமுத்திரக்கனி, தேவையான நேரங்களில் நேதாஜி போல் பொங்கியெழுந்து சண்டையும் போடுகிறார். ‘தமிழ் வாத்தியார்னா கணுக்கால் வரைக்கும் வேட்டி கட்டிக்கிட்டு, கக்கத்துல ரெண்டு புத்தகத்த வச்சுக்கிட்டு இருப்பார்னு நினைச்சீங்களா?’ என டயலாக் பேசி அடியாட்களைப் பந்தாடுகிறார்.

‘நான் என்ன பீச்சுன பாலா? பிரின்ஸ்பால்’, ‘போதும்பொண்ணு... மார்க் போதாது பொண்ணு’ என ரைமிங்காகப் பேசுகிறேன் என்று எரிச்சல் மூட்டுகிறார் தம்பி ராமையா. அதுவும் அடிக்கடி அவர் மைண்ட் வாய்ஸ் போல் வரும் வசனங்கள் அனைத்தும் எரிகிற எரிச்சலில் எண்ணெய்யை ஊற்றுகின்றன. அடியில் ஸ்பிரிங்குடன் இருக்கும் பொம்மையை ஒருமுறை தட்டிவிட்டால், நீண்ட நேரத்துக்கு ஆடிக்கொண்டே இருக்குமே... அதுபோல் படம் முழுக்கத் துள்ளிக்கொண்டே இருக்கிறார். பெரும்பாலான படங்களில் வரும் இந்த ஒரே உடல் மொழியை தம்பி ராமையா மாற்றிக்கொண்டால் நல்லது.

கல்லூரி மாணவியாக அதுல்யா ரவி, தன்னுடைய பங்கை சிறப்பாகச் செய்துள்ளார். பேராசிரியர்களாக வரும் சிலரின் மிகை நடிப்பு, துருத்தலாக இருக்கிறது. சமுத்திரக்கனியே அடைமழையாக அட்வைஸ் செய்து கொண்டிருக்க, ‘எதிரிகள் வெட்கப்படுற அளவுக்கு வாழ்ந்து காட்டணும்’ என சசிகுமார் வேறு சிறப்புத் தோற்றத்தில் வந்து இடியாக இறங்குகிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், யுகபாரதி வரிகளில் ‘எங்க கையில நாட்டைக் கொடுங்க’ மற்றும் ‘வேகாத வெயிலுல’ இரண்டு பாடல்களும் அருமை. அதுவும் காஞ்சி பி.ராஜேஸ்வரி குரலில் ‘வேகாத வெயிலுல’ பாடல், மனம் கனக்கச் செய்கிறது. ஆனால், பின்னணி இசை... ஐஸ்டினா இது? என அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. இராசாமதியின் ஒளிப்பதிவு, கும்பகோணத்தின் குளுமையை அள்ளியெடுத்து வந்திருக்கிறது.

அதேசமயம், சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வந்த மாணவர் நாடாளுமன்றம் குறித்து திரையில் சொன்ன விதம் அருமை. அத்துடன், நம் கல்வி முறை, கேள்வித்தாளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தலில் இருக்கக்கூடிய சிக்கல் ஆகியவற்றைப் பேசியதும் பாராட்ட வைக்கிறது.

‘நாம பேச வேண்டியது வாங்குன மார்க்கைப் பத்தி இல்ல சார், வாங்கப்போற மார்க்கைப் பத்தி’, ‘ரிசல்ட் மட்டுமே வாழ்க்கை இல்ல சார்’, ‘படிச்ச வாத்தியார் வேணாம் சார், தினம் தினம் படிக்கிற வாத்தியார்தான் வேணும்’, ‘கையில கட்டிருக்கு கயித்தையே கழுத்துல மாட்டிக்கிட்டு தொங்குங்க’ என ஒருசில வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

ஆனால், எல்லாவற்றையும் வசனங்கள் மூலம் அட்வைஸாகச் சொல்வது, டாக்குமெண்ட்ரி படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது. இத்தனைப் பிரச்சினைகளையும் அட்வைஸ் செய்து தீர்த்ததற்குப் பதிலாக, ஒரு பிரச்சினையை வாழ்வியல் மூலம் தீர்ப்பதாகக் காட்டியிருந்தால் படம் கொண்டாடப்பட்டிருக்கும்.

சாட்டையைக் கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு, அட்வைஸையும் தூக்கித் தூர எறிந்துவிட்டு, இயல்பாகக் கொஞ்சம் யோசியுங்கள். இன்னொரு சாட்டை இனி யாருக்கும் தேவைப்படாது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x