‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமைவிழிகள்’, ‘கரிமேடு கருவாயன்’... 86-ல் 10 படங்களில் நடித்து வெரைட்டி காட்டிய விஜயகாந்த்
வி.ராம்ஜி
1986-ம் ஆண்டு, பத்துப் படங்களில் நடித்தார் விஜயகாந்த். பத்துப் படங்களிலும் ஒவ்வொரு விதமான கேரக்டர்களில் வித்தியாசம் காட்டி வெளுத்து வாங்கினார்.
பிலிம் இன்ஸ்டியூட் என்ற பெயரே எண்பதுகளுக்கு முன்பு வரை நமக்குத் தெரியாமலே இருந்தது. அங்கே படித்துவிட்டு வந்த கலைஞர்களுக்கு பெரிய மதிப்போ அவர்கள் மீது நம்பிக்கையோ இல்லாமல் இருந்த நிலைதான் அப்போது.
அந்த சமயத்தில்தான், அட்டகாசமான கதையை வைத்துக் கொண்டு, விஜயகாந்தை அணுகினார்கள் தயாரிப்பாளர் ஆபாவாணனும் இயக்குநர் அரவிந்தராஜும். அவர்களின் திறமையை, கதை சொல்லும் விதத்திலேயே கண்டறிந்தார் விஜயகாந்த்.
படத்தில் கார்த்திக், சந்திரசேகர், அருண்பாண்டியன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆனாலும் ஒத்துக்கொண்டார். டிஎஸ்பி.தீனதயாளன் என்ற கேரக்டரில் நடித்து அசத்தினார் விஜயகாந்த்.
படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். சந்திரசேகருக்கு, அருண்பாண்டியனுக்கு, கார்த்திக் - சசிகலா ஜோடிக்கு, டிஸ்கோ சாந்திக்கு என பாடல்கள் இருந்தன. விஜயகாந்துக்கு ஒருபாடல் கூட இல்லை. போலீஸ் உடையில், மிடுக்குடன் அவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. சொல்லப்போனால், பின்னாளில் ஏகப்பட்ட போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு, இந்த தீனதயாளன் கேரக்டர் தான் அச்சாரம் போட்டது.
விஜயகாந்துக்கு சரிதா ஜோடி. முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 86-ம் ஆண்டில், இந்தப் படத்தில் நடித்தவர்களில் விஜயகாந்துக்கு என அட்டகாசமான மார்க்கெட் வேல்யூ இருந்தது. அவரை வைத்து தியேட்டருக்கு வந்தார்கள் ரசிகர்கள். பிறகு படத்தின் மேக்கிங்கிலும் கதை சொல்லும் பாணியிலும் சொக்கிப் போனார்கள். திரும்பத் திரும்பப் பார்த்தார்கள்.
இதன் பின்னர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் கைதூக்கிவிட்டார் விஜயகாந்த். ‘பிலிம் இன்ஸ்டியூட் ஸ்டூடண்டா? அசத்திருவாங்கய்யா’ என்று தயாரிப்பாளர்களும் தைரியமாக படங்களை இயக்குகிற வாய்ப்பைத் தந்தார்கள். ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், எடிட்டர் என ஏராளமானோர் வெற்றி பெற்றார்கள்.
இதே வருடத்தில், ஆர்.சுந்தர்ராஜனின் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. விஜயகாந்துடன், ராதா, ஸ்ரீவித்யா, ரவிச்சந்திரன், செந்தில் என பலரும் நடித்திருந்தனர். ராஜராஜன் ஒளிப்பதிவில் லொகேஷன் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட்டாகின. ‘நம்ம கடைவீதி கலகலகலக்கும்’, ‘சின்னமணிக்குயிலே’, ‘உன் பார்வையில் ஓராயிரம்’, ‘காலை நேரப் பூங்குயில்’, ‘பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வைச்சேனே’, ‘ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி’ என பாட்டெல்லாம் பட்டையைக் கிளப்ப, படமும் அட்டகாசமான காதலும் அருமையான இசையும் கலந்து படமாக்கப்பட்டிருந்தது. அநேகமாக, இந்தப் படத்திலிருந்துதான் சைடு வாகு எடுத்திருந்த விஜயகாந்த், நடு வகிடு எடுத்து நடிக்கத் தொடங்கினார்.
சென்னை மாதிரியான நகரங்களில் கூட, இந்தப் படம் 150 நாளைக் கடந்து ஓடியது. காரைக்குடி மாதிரியான சிறுநகரங்களிலும் 70 நாட்களைக் கடந்து ஓடியது. படத்தின் விழாவுக்கு விஜயகாந்த், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டவர்கள், ஒவ்வொரு ஊருக்கும் வந்தார்கள்.
நடிகை வடிவுக்கரசி தயாரிக்க, நடிகர் சிவச்சந்திரன் கதை, திரைக்கதை எழுத, பில்லா ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், ‘அன்னை என் தெய்வம்’ படம் வெற்றிப்படமாக அமைந்தது. கே.ஆர்.விஜயாவின் நடிப்பு பேசப்பட்டது. மாதுரி நாயகி.
ஏவிஎம்மின் ‘தர்மதேவதை’யும் ‘ஒரு இனிய உதயம்’ திரைப்படமும் எதிர்பார்ப்புடன் வந்து, சுமாராகத்தான் ஓடின. ஆனால் விஜயகாந்தின் எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தைக் கொடுத்ததே இல்லை.
இதே வருடத்தில், இயக்குநர் கே.சங்கரின் இயக்கத்தில் ‘நம்பினார் கெடுவதில்லை’ எனும் பக்திப் படத்திலும் நடித்தார் விஜயகாந்த். மீண்டும் ஆர்.சுந்தர்ராஜனின் ‘தழுவாத கைகள்’ படத்தில் நடித்தார். இந்த முறை அம்பிகா ஜோடி. ‘வைதேகி காத்திருந்தாள்’ போல, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ போல, தன் தனித்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜயகாந்த். இளையராஜா இசை. பாடல்கள் எல்லாமே எல்லோரையுமே ஈர்த்தன.
ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் ‘மனக்கணக்கு’ படமும் அப்படித்தான். விஜயகாந்தின் பண்பட்ட நடிப்பை இதில் பார்க்கலாம். ராஜேஷ்தான் ஹீரோ. ராதா நாயகி. இந்தப்படத்தின் இன்னொரு சிறப்பு... கமலுடன் விஜயகாந்த் இணைந்து நடித்த படம் இது. தன் நண்பன் ஆர்.சி.சக்திக்காக, கமல் கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார்.
இதே வருடத்தில் வந்த ‘எனக்கு நானே நீதிபதி’யும் ‘கரிமேடு கருவாயன்’ திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தன. முதல் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். ‘கரிமேடு கருவாயன்’ படத்தை ராம.நாராயணன் இயக்கினார். இளையராஜா இசையில், பாடல்களும் வெற்றிக்கு வழிவகுத்தன.
ஆக, 86-ம் ஆண்டில், கமல், ரஜினியை அடுத்து வசூல் மன்னன் என்ற நிலைக்கு முன்னேறிக்கொண்டே இருந்தார் விஜயகாந்த்.
