

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள 'வலிமை' திரைப்படம் 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கவுள்ள இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இதில் அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற தேர்வு முடிவடைந்துவிட்டாலும், படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இருக்கிறது படக்குழு. இதனிடையே டிசம்பர் 13-ம் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.
2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்குச் சாத்தியமில்லாத காரணத்தால், தீபாவளிக்கு 'வலிமை' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையும் தருணத்தைப் பொறுத்து இதனை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
டிசம்பர் 13-ம் தேதி படப்பிடிப்புக்குச் செல்லும் முன்பு படத்தில் அஜித்துடன் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டவற்றை அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதில் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ள சண்டைக்காட்சிகளை ஹாலிவுட் சண்டைக் கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.