

நடிகர் பாலா சிங் மறைவுக்கு இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் பிரபலமான குணச்சித்திர நடிகரான பாலா சிங் சென்னையில் உடல்நிலை சரியில்லாமல் காலமானார். அவருக்கு வயது 67. 'இந்தியன்', 'ராசி', 'புதுப்பேட்டை', 'விருமாண்டி' உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'என்.ஜி.கே' படத்தில் நடித்திருந்தார். அதிலும், இவரது யதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது. 'என்.ஜி.கே' இவரது நடிப்பில் வெளியான 100-வது படமாகும்.
பாலா சிங் மறைவு குறித்து இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில், "பாலா சிங் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர் ஓர் அற்புதமான நடிகர். எனது நெருங்கிய சகா. அவரது மறைவு என்னை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அவரின் அன்பர்களுக்கு எனது அனுதாபங்கள். அமைதியில் இளைப்பாறுங்கள் என் நண்பரே" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள பாலா சிங்கின் வீட்டில் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான களியக்காவிளைக்கு அவரது உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட உள்ளது.