

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு சுமார் 200 நாட்களுக்கும் அதிகமாக நடைபெற இருக்கிறது.
'பொல்லாதவன்', 'ஆடுகளம்' இணைப்பான தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து மீண்டும் படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள்.நீண்ட நாட்களுக்கு முன்பு சிம்புவை நாயகனாக வைத்து வெற்றிமாறன் இயக்கவிருந்த 'வட சென்னை' படத்தை தற்போது தனுஷை வைத்து மீண்டும் துவங்க இருக்கிறார். சமந்தா நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தை இரண்டு பாகங்களாக காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் வெற்றிமாறன். தனுஷை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் காட்ட திட்டமிட்டு இருக்கிறார். மேலும், தனுஷ் பாத்திரத்தின் 30 ஆண்டுகள் வளர்ச்சியை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
இப்படத்துக்காக சென்னையில் சுமார் 200 நாட்களுக்கும் அதிகமாக படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. தனுஷ் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மட்டும் சுமார் 7 மாதங்கள் நடைபெற இருக்கிறது. ஜனவரி 2016ல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
'வட சென்னை' முன்பாக பிரபு சாலமன் படத்தை முடித்துவிட்டு, துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.