

'ஒத்த செருப்பு' படம் பார்த்துவிட்டு பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுப் பரிந்துரைக்கு 'ஒத்த செருப்பு' தேர்வு செய்யப்படாதது குறித்தும் பல திரையுலகப் பிரபலங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனிடையே, முன்னணி இயக்குநரான மணிரத்னம் 'ஒத்த செருப்பு' படத்தைப் பார்த்துவிட்டு, பார்த்திபனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
அதில், "எழுத்து, நடிப்பு மற்றும் இயக்கம் என அனைத்தும் அற்புதம். தனியாளாக ஒரு படம் என்ற சிந்தனையும், அதை உருவாக்கி இப்படி முடித்து வெளியிட்டிருக்கும் தைரியமும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்துகள் பார்த்திபன்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதனை பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மணிரத்னம். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற நடிகர்களுடன் பார்த்திபனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.