

இதற்குப் பிறகு படம் பண்ணுவேனா எனத் தெரியவில்லை என்று 'ஆதித்ய வர்மா' பட விமர்சனத்துக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் த்ருவ் விக்ரம் பேசினார்.
கிரிசாயா இயக்கத்தில் த்ருவ் விக்ரம், பனிட்ட சந்து, ப்ரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஆதித்ய வர்மா'. நவம்பர் 22-ம் தேதி வெளியான இந்தப் படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காகும்.
தமிழில் இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வசூல் ரீதியாக புது நாயகனான த்ருவ் விக்ரம் படத்துக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் கிடைத்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'ஆதித்ய வர்மா' படக்குழு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. இந்தச் சந்திப்பில் நாயகிகள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிகழ்ச்சியில், தனக்கு சிறுவயதிலிருந்தே உறுதுணையாக இருந்து வரும் அனைவரது பெயரையும் குறிப்பிட்டு த்ருவ் விக்ரம் நன்றி தெரிவித்தார். மேலும், படப்பிடிப்பின் போது தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இது தொடர்பாக த்ருவ் விக்ரம் பேசியதாவது:
"திரையரங்கில் படத்தைப் பார்க்கும் போது, திரையில் என்னைப் பார்க்கவில்லை. அப்பாவைத்தான் பார்த்தேன். நல்ல நடித்த காட்சிகள் அனைத்தையுமே அப்பாடா.. அப்பா இப்படித்தான் நடித்திருப்பார் என்று பார்த்தேன்.
ஒவ்வொரு காட்சிக்குமே எனது நடிப்பைப் பார்த்துப் பார்த்து செதுக்கினார். இந்தக் கதாபாத்திரத்தை அவ்வளவு உள்வாங்கிக் கொண்டார். இந்தக் கதாபாத்திரத்தை எதார்த்தமாகப் பண்ணியிருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம். 'ஆதித்ய வர்மா' கதாபாத்திரத்தை என் மூலமாக அவர் பார்த்தார். அவர் மூலமாக நான் பார்த்தேன்.
என் மீது அவர் வைத்திருக்கும் அன்பும், பாசமும் அப்படியே தெரிகிறது. அவருக்கு சினிமா மீதிருக்கும் அன்பை இந்தப் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். எப்படி நடிக்க வந்தாய் என்று பலரும் கேட்கிறார்கள். சிறுவயதிலிருந்தே எனக்கு சினிமா என்றால் ரொம்பவே பிடிக்கும். அப்பாவையும் ரொம்பப் பிடிக்கும். என் அப்பாவினால் மட்டுமே இந்தப் படம் இப்படி வந்துள்ளது. அவரால் மட்டுமே இந்தப் படம் நடந்துள்ளது.
என் வாழ்க்கையில் ஏதேனும் நல்லது பண்ணினால் அது என் அப்பாவால் மட்டுமே. அப்பா ஒரு பெரிய நடிகராக இருந்துகொண்டு ஒவ்வொரு காட்சிக்குமே முடி, தாடியை எல்லாம் சரி செய்துவிடுவார். இந்தப் படம் ஹிட், நல்லாப் போகுது என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்குக் காரணம் நானல்ல. அதற்குக் காரணம் இங்கிருக்கும் படக்குழுவினர் அனைவருமே. ஒரு நடிகராக மட்டுமே நடித்துள்ளேன்.
இதற்குப் பிறகு படம் பண்ணுவேனா எனத் தெரியவில்லை. ஏனென்றால் அப்பா இல்லாமல் எப்படிப் படப்பிடிப்புக்குச் செல்வேன் எனத் தெரியவில்லை. அவர் இல்லாமல் நானில்லை. அவர் ஒரு சிறந்த நடிகர், சிறந்த அப்பா. கடந்த 10 மாதங்களாக அவருடைய எந்தப் பணியையும் அவர் பார்க்கவில்லை. என் அப்பாவுக்கு இந்த வயதில் இதே போன்றதொரு அறிமுகம் கிடைத்திருந்தால், அவர் வேற லெவலில் போயிருப்பார். ஐ லவ் யூ அப்பா''.
இவ்வாறு த்ருவ் விக்ரம் பேசினார்.