

மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் ஆதித்யா (துருவ் விக்ரம்) ஒரு செல்வந் தரின் மகன். ஸ்டெதஸ்கோப் போல கோபத்தையும் அணிந்திருக்கும் முன் கோபி. முதலாமாண்டு மாணவியான மீராவை (பனிதா சந்து) பார்த்த துமே காதல் கொள்கிறான். மீராவும் ஆதித்யாவால் கவரப்படுகிறாள். தலைமுறை இடைவெளியும், சாதி யும் இவர்களது காதலுக்கு குறுக்கே வருகின்றன. மனிதர்களாலும், சூழ் நிலையாலும் காதலியைப் பிரியும் ஆதித்யா, போதைக்கு அடிமையாகி றார். ஒரு கட்டத்தில் மருத்துவர் உரி மத்தையும் இழந்து நிற்கும் அவர், தனது காதலியை மீண்டும் சந்தித் தாரா, வாழ்க்கையில் அவர்கள் இணைந்தார்களா என்பது மீதிக் கதை.
நடிகர் விக்ரமின் வாரிசான துருவ் அறிமுகமாகியுள்ள படம். தெலுங்கில் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத் தின் தமிழ் மறு ஆக்கம். இந்த இரு நோக்கங்களையும் நிறைவேற்ற, இளம் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து படமாக்கி உள்ளனர்.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தைப் பார்த்த வர்களுக்குக் கிடைத்த உணர்ச்சி களின் ‘ரோலர் கோஸ்டர்’ விளை யாட்டை ‘ஆதித்ய வர்மா’விலும் சாத்தியமாக்கி இருக்கிறார் இயக் குநர். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை அப்படியே பிரதி எடுத்த வகையில் இயக்குநர் கிரிசாயாவின் திற மையைப் பாராட்டலாம்.
ஆனால், தெலுங்கு ரசிகர்களுக் காக வைக்கப்பட்ட மிகை உணர்ச்சி, மிகை சித்தரிப்புகள் கொண்ட ஒரு படத்தை தமிழில் மறு ஆக்கம் செய் யும்போது, இங்குள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் கொண்டு, பல காட்சிகளைக் கழித்தும், சில காட்சிகளை சேர்த்தும் படமாக்கி யிருக்க வேண்டும். அந்த விதத்தில் தோல்வி அடைந்திருக்கிறார் இயக் குநர்.
ஏற்கெனவே மிகை சித்தரிப்புகள் கொண்ட படத்தில், காட்சிகளின் வழியாக தன் பங்குக்கு உணர்ச்சி களைத் தூண்டியிருக்கிறார் ஒளிப்பதி வாளர் ரவி.கே.சந்திரன். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் ரதனின் இசை மற்றும் வசனம் மட்டுமே படத்தின் மென் உணர்வுக்கு ஓரள வுக்கு உதவுகின்றன.
கதாநாயகனின் செல்வச் செழிப்பு, அவனது கோபம், எல்லை மீறிய காதல் சிறகடிப்பு, பிரிவை ஏற்கமுடி யாமல் நவீன தேவதாஸாக போதை யின் பிடியில் வீழ்வது, ஒரு முக் கிய குடும்ப உறுப்பினரின் இறப்புக் குப் பிறகு மீண்டு வருவது என வடிக்கப்பட்டிருந்த ‘அர்ஜுன் ரெட்டி’ கதாபாத்திரத்தை, தனது நடிப்பின் மூலம் திறம்பட வெளிப்படுத்தியிருக் கிறார் துருவ் விக்ரம். தனது அப்பா வின் குரலையும் அவரது உடல் மொழியின் ஒரு பகுதியையும் தன் னையும் அறியாமல் வெளிப்படுத்தி யிருக்கும் அவர், படத்தை தன் தோளில் தாங்கியிருக்கிறார். வசனங் களைத் தெளிவுறப் புரியும்படி உச்சரிப் பதில் அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்.
கதாநாயகியாக வரும் பனிதா சந்துவுக்கு அதிகப்படியான முத்தக் காட்சிகளில் நடிக்கவேண்டிய சவா லான கதாபாத்திரம். அதிக வசனங்கள் இல்லாமல், கண்களால் நடிக்க வேண்டிய கட்டாயத்தை இலகுவாகக் கடந்து சென்றிருக்கிறார். சில காட்சி களில் தமிழ் வசனங்களுக்கு பொருத்த மாக வாய் அசைப்பதா, கதாபாத்திரத் தின் உணர்ச்சியை வெளிப்படுத்து வதா என்ற குழப்பத்தில் சிக்கியிருப் பதைப் பார்க்க முடிகிறது.
ஆதித்யாவின் அப்பாவாக நடித் திருக்கும் ராஜா, பாட்டியாக நடித் திருக்கும் லீலா சாம்சன், அண்ண னாக நடித்திருப்பவர், நண்பனாக நடித்திருக்கும் அன்புதாசன் என துணை கதாபாத்திரங்களில் நடித்திருப் பவர்கள் துருவ் விக்ரமின் கதா பாத்திரம் ஒளிவீச உதவுகிறார்கள்.
ஒரு காதல் படம், எதன் அடிப் படையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருக் கிறது என்பதற்கு அடையாளமாக, நெருக்கமான முத்தக் காட்சிகளும், குடி, போதை காட்சிகளும் அளவுக்கு அதிகமாகவே மலிந்திருக்கின்றன.
இவை போன்ற இடறலான அம்சங் களுக்கு அப்பால், மிகையுணர்ச்சி கொண்ட காதல் படங்களின் வரிசை யில் ‘ஆதித்ய வர்மா’வுக்கும் ஓர் இடம் கொடுக்கலாம்.