

டிசம்பர் 6-ம் தேதி, 6 படங்கள் வெளியாக உள்ளன. அனைத்துக்குமே போதிய அளவுக்குத் திரையரங்குகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த தீபாவளி விடுமுறையில், விஜய் நடிப்பில் 'பிகில்' மற்றும் கார்த்தி நடிப்பில் 'கைதி' ஆகிய படங்கள் வெளியாகின. இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்ததால், அடுத்தடுத்த தேதிகளில் வரவேண்டிய படங்கள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
நவம்பர் 15-ம் தேதி வெளியான 'ஆக்ஷன்' மற்றும் 'சங்கத்தமிழன்' ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியைச் சந்தித்தன. நவம்பர் 22-ம் தேதி வெளியான 'ஆதித்ய வர்மா' படம், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியில் எப்படி என்பது விரைவில் தெரியவரும்.
இந்நிலையில், டிசம்பர் 6-ம் தேதி வெளியீடாக இப்போதுவரை 6 படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'பிகில்' மற்றும் 'கைதி' ஆகிய படங்கள் இப்போதுவரை நல்லபடியாக வசூல் செய்துவரும் நிலையில், 6 படங்களின் வெளியீடு சாத்தியமா? என்ற கேள்வியும் எழுகிறது.
கதிர் நடித்துள்ள 'ஜடா', பா.இரஞ்சித் தயாரித்துள்ள 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'தனுசு ராசி நேயர்களே', சுந்தர்.சி நடித்துள்ள 'இருட்டு', ஜெய் நடித்துள்ள 'கேப்மாரி' மற்றும் பாவல் நவகீதன் இயக்கியுள்ள 'வி1' ஆகிய படங்கள் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளன.
இவை மட்டுமன்றி, டிசம்பரில் 20-ம் தேதியிலிருந்து கிறிஸ்துமஸ் விடுமுறை எனக் கணக்கிட்டு, பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன. அன்றைய தினங்களில் எவ்வளவு படங்கள் உறுதியாக வெளியாகின்றன என்பது விரைவில் தெரியவரும்.