

ரஜினி - கமல் அரசியலில் ஈடுபடுவது நல்ல விஷயம் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் கதைகள் கேட்டு வருகிறார். தெலுங்கில் 2 படங்களிலும், இந்தியில் 1 படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா.
இந்நிலையில், திருச்சியில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார் தமன்னா. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் அவர் பேசியதாவது:
13 ஆண்டுகளாக இந்தத் திரையுலகில் இருக்கிறேன். இந்தாண்டு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் நான் நாயகியாக நடித்த 7 படங்கள் வெளியாகியுள்ளது. புதுப்புது கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறேன். அதற்கு ரசிகர்கள் தொடர்ச்சியாகத் தரும் ஆதரவு என்னை நிலைத்து நிற்கச் செய்துள்ளது. நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை
இவ்வாறு தமன்னா பேசினார். இதனைத் தொடர்ந்து ரஜினி - கமல் இருவருடனும் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு "நான் ஒரு ரசிகையாகத் தொடர்ந்து இருவரது படங்களையும் பார்த்து வருகிறேன். இருவரையுமே கடவும் மாதிரி பார்க்கிறேன். அவர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் யார் தான் மாட்டேன் என்பார்கள். நிச்சயமாக இருவருடனும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்." என்று பதிலளித்தார் தமன்னா.
இருவரது அரசியல் வருகை குறித்த கேள்விக்கு "இருவருமே நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். இருவருமே அரசியலில் ஈடுபடுவது நல்ல விஷயம்" என்று தெரிவித்தார் தமன்னா.
திருமணம் எப்போது என்ற கேள்விக்கு "நல்ல மாப்பிள்ளையைத் நீங்களே தேடிக் கொடுங்கள். தமிழ்நாட்டு மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்” என்று நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார் தமன்னா.