

படப்பிடிப்புக்குத் தாமதமாகச் செல்கிறார் என்று சுற்றி வரும் செய்திக்கு 'கேப்மாரி' பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜெய் விளக்கமளித்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி, சித்தார்த் விபின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கேப்மாரி'. க்ரீன் சிக்னல் தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
இதில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் பதிலளித்தார். அப்போது 'கேப்மாரி' படம் தொடர்பாக விஜய் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு "அவர் எதுவுமே சொல்ல மாட்டார். ஏன் படம் பண்றீங்க, வொர்க் பண்றீங்க என்று கேட்பார்" என பதிலளித்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
அதனைத் தொடர்ந்து ஜெய் பேசும் போது, "இது எனக்கு ஸ்பெஷலான படம். ஏனென்றால், இது எனது 25-வது படம். ரொம்ப ஜாலியான ஒரு படத்தில் சின்ன மெசேஜ் சொல்லியிருக்கிறோம். இந்தப் படத்தின் காட்சிகள் எல்லாம் அவ்வளவு உண்மையாக இருக்கும். அது ரொம்பவே பிடித்திருந்தது.
இந்தப் படத்தின் கதையும் என் வாழ்க்கையைப் போலவே இருந்தது. இப்போது கூட நான் படப்பிடிப்பு தாமதமாக வருவதாகச் செய்திகள் வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகச் சரியான நேரத்துக்கு அனைத்து படப்பிடிப்புக்குமே சென்றிருக்கிறேன். என்றைக்காவது ஒரு நாள் தாமதமாகப் போயிருப்பேன். அதை இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேசினார் ஜெய்.