

இணையத்தில் வெளியிடப்பட்ட ’தலைவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பலரும் தங்களுடைய பதிவுகளால் கிண்டல் செய்துள்ளனர்.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் 'தலைவி'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எவ்வித முன்னுறிவுப்புமின்றி நேற்று (நவம்பர் 23) வெளியிட்டது படக்குழு. முதலில் போஸ்டரை மட்டும் வெளியிட்டவர்கள் பின்பு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ஒன்றையும் வெளியிட்டார்கள்.
இந்த இரண்டுமே இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. பலருமே இது மறைந்த ஜெயலலிதா என்றால் யாருமே நம்ப மாட்டார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கிண்டல்களும் வலுக்கவே உடனடியாக புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டது.
ஃபர்ஸ்ட் லுக் டீஸரின் இறுதிக்காட்சிகளில் இரட்டை இலை சின்னத்தைக் காட்டிக் கொண்டு கங்கணா ரணாவத் திரும்பும் காட்சியையே பலரும் கிண்டல் செய்துள்ளனர். ஏனென்றால், அந்த லுக் வேறு யாரோ மாதிரி இருப்பதாகத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த லுக்கிற்காக ஹாலிவுட்டிலிருந்து பல்வேறு மேக்கப் கலைஞர்கள் பணிபுரிந்திருப்பதாகவும், சுமார் ஆறரை மணி நேரம் மேக்கப் போட ஆனதாகவும் இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.
'தலைவி' படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும், முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் 'தலைவி' என்ற பெயரிலேயே உருவாகவுள்ளது. ஜூன் 26-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.