Published : 24 Nov 2019 07:35 AM
Last Updated : 24 Nov 2019 07:35 AM

திரை விமர்சனம்- கே.டி.(எ) கருப்புதுரை

வாழ்வின் அந்திமத்தில், உற வுகளால் உதறப்பட்ட ஒரு முதியவரும், வாழ் வின் தொடக்கத்திலேயே தூக்கி வீசப்பட்ட ஒரு சிறுவனும் வாழ்க்கையைக் கொண்டாடும் பேரன்பின் பெருவழிப் பயணம்.

கல்லுப்பட்டி என்ற தென் மாவட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புதுரை (மு.ராமசாமி). அறுபதைக் கடந்த முதியவர். நோயில் விழுந்து படுத்த படுக்கை யாக இருக்கிறார். அவரைப் பராமரித்து அலுத்துப்போன குடும் பத்தினர், கிராமிய முறைப்படி அவரைக் கருணைக் கொலை செய்ய முடிவு செய்கிறார்கள். இதைக் கேட்டு பதறும் முதியவர், வீட்டில் இருந்து தட்டுத் தடுமாறி எழுந்து சென்று, செங்கோட்டை பேருந்தில் ஏறி தப்பிச் செல்கிறார். வழியில் பேருந்து பழுதாக, அங்கு உள்ள கோயில் மண்டபத் தில் தங்குகிறார். ஏற்கெனவே அங்கு தங்கியிருக்கும் குட்டி (நாக விஷால்) என்ற ஆதரவற்ற சிறுவன், கருப்புதுரையை துரத்த முயல்கி றான். முதலில் அவரைப் போட்டி யாகக் கருதும் அவன், பின்னர் அவரை நேசிக்கத் தொடங்குகி றான். இருவருக்கும் மெல்ல மெல்ல நேசம் துளிர்க்கிறது.

இதற்கிடையில் காணாமல் போன கருப்புதுரையைக் குடும்பத் தினர் தேடுகின்றனர். அவர் ஊர் திரும்பினாரா எனும் கேள்விக்கு விடை தருகிறது படம்.

ஊட்டி வளர்த்த பிள்ளைகளே தன்னைக் கொல்ல நினைக்கிறார் களே எனும் வேதனையில் வாடும் கருப்புதுரை, குட்டியின் பிரியத் தில் நெகிழ்கிறார். குட்டியும் அதுவரை கிடைத்திராத பாசத்தை அவர் வழியாகப் பெறுகிறான்.

இதுபோன்ற நெகிழ்ச்சியான பயணப் படத்தில் முடிந்தவரை ரசிகர்களை அழவைத்துவிட வேண் டும் என்றே இயக்குநர் விரும்புவார். ஆனால், சின்னச் சின்ன நகைச் சுவையால் சீராக நகர்ந்துசெல்லும் திரைக்கதை படத்தை சுவாரஸ்யப் படுத்திவிடுகிறது.

கிராமத்தின் ரம்மியமான சூழ லில் வாழ்வைத் தங்களுக்குப் பிடித்தவகையில் முதியவரும் சிறுவனும் வாழும்போது, பின்னணி யில் அவ்வப்போது செல்லும் ரயில், பரபரப்பான பிறரது வாழ்க் கையை உணர்த்துவது அழகு. பெரியவரைப் பிரிந்துசெல்லும் போது ‘அவருக்கு ஒன்றும் தெரி யாது.. கவனித்துக்கொள்ளுங்கள்’ என குட்டி சொல்லிச் செல்லும் காட்சி, தனித்தே வளர்ந்த அந்தச் சிறுவன் கதாபாத்திரத்தின் தன்னம் பிக்கையை பளிச்சென்று காட்டும் இடம். ‘என் ஆத்தாகூட என்ன இப்படி கவனிச்சுக்கிடலடா’ என்று குட்டி யிடம் கருப்புதுரை கூறும் காட்சி, கைவிடப்பட்ட முதியவரின் மொத்த வலியையும் பார்வையாளர்க ளுக்குக் கடத்துகிறது. இப்படி படம் முழுவதும் போலித்தனம் இல்லாத பல நெகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மதுமிதா.

மு.ராமசாமி, நாகவிஷால் இரு வரும்தான் படத்தை முழுவதும் தாங்கிச் செல்கிறார்கள். இருவ ருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்ற சிறந்த நட்சத்திரத் தேர்வு.

சிறுவனாக இருந்தாலும் பெரிய மனிதத் தோரணையுடன் நடந்து கொள்ளும் குட்டியிடம் பிரியத்தை வெளிப்படுத்தும்போது, ஒவ் வொரு முறையும் பிரியாணியை சுவையாக ரசித்து உண்ணும்போது, தன் முன்னாள் காதலியை வீடு தேடிச் சென்று காணும்போது என அனைத்துக் காட்சிகளிலும் முழு மையான நடிப்பை வெளிப்படுத்தி யிருக்கிறார் ராமசாமி.

கருப்புதுரையை ‘கேடி’ என்று சுருக்கமாக அழைப்பதில் தொடங்கி, அவரை அன்பால் மிரட்டு வது, அவரது நடவடிக்கைக ளுக்குப் பொருள் புரியாமல் தவிப்பது வரை எல்லாக் காட்சிகளி லும் ராமசாமிக்கு ஈடுகொடுத்து பெரிய நடிகர் போலவே நடித்து, பிரமிக்க வைக்கிறான் நாகவிஷால்.

படம் முழுவதும் இவர்கள் இருவரும் பயணித்தாலும், அந்தக் கதாபாத்திரங்கள் மீது சலிப்பே வராத வகையில் படமாக்கி இருப்பதில் இயக்குநரின் கைவண் ணம் தெரிகிறது. இந்த இருவரையும் தாண்டி, படத்தில் வரும் துணைக் கதாபாத்திரங்களும் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொள்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் கெம்புராஜ், தற்கால கிராமங்க ளின் அழகை இயல்பும் பசுமை யுமாகக் காட்டியிருக்கிறார். இரவுக் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின் றன. காட்சிகளில் தென்படும் இருளும் ஒளியும் இணைந்து, நேரடி யாக சம்பவங்களைப் பார்ப்பது போன்ற எண்ணத்தைத் தருகிறது.

விஜய் வெங்கட்ரமணனின் படத்தொகுப்பு கச்சிதம். கார்த்திகேயா மூர்த்தியின் பாடல் கள், பின்னணி இசை இரண்டுமே உறுத்தாத வகையில் கதாபாத்திரங் களின் பயணத்துடன் ஒன்றிணைந்து செல்கின்றன.

படத்தின் மிகப் பெரிய துருத்தல் ஈசன் கதாபாத்திரம். படுத்த படுக் கையாகக் கிடப்பவரை கருணைக் கொலை செய்யமுயல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஆனால் நல்ல உடல்நிலையோடு வீட்டுக் குத் திரும்ப வரும் அவரை கருணைக்கொலை செய்ய முடிவு செய்வது அப்பட்டமான சினிமாத்தனம்.

இவைபோன்ற குறைகளை மீறி, உறவு என்றால் எப்படி இருக்க வேண்டும், முதியவர்கள், ஆதர வற்றவர்களிடம் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்றவற்றை வெறுமனே போதிக் காமல், உணர்த்திக் காட்டிய வகையில் கே.டி.(எ) கருப்புதுரை சிறப்புத் துரையாக ஜொலிக்கிறார்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x