சித்தார்த் - கார்த்திக் ஜி.கிரிஷ் இணைந்த டக்கர்

சித்தார்த் - கார்த்திக் ஜி.கிரிஷ் இணைந்த டக்கர்
Updated on
1 min read

நடிகர் சித்தார்த்தும் 'கப்பல்' பட இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷும் இணைந்து பணியாற்றிய 'சைத்தான் கா பச்சா' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில், முன் அறிவிப்பின்றி இருவரும் அடுத்த ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கின்றனர்.

இருவரும் இணைந்து பணியாற்றிய 'டக்கர்' என்று பெயரிடப்பட்ட அடுத்த படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டார்கள். அதிரடிக் காட்சிகள் நிரம்பிய இந்தக் காதல் படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது முடியும் நிலையில் உள்ளன.

இது குறித்து இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷிடம் கேட்டபோது, "அகங்காரமும் கோபமும் கொண்ட இரண்டு கதாபாத்திரங்கள், ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைத்தான் இந்தப் படம் விவரிக்கிறது.

'சைத்தான் கா பச்சா' படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது, ஒரு கதைக் கருவை சித்தார்த்திடம் சொன்னேன். உடனே அவர் இந்தக் கதைக்கருவை விரிவாக்கி முழுமையான திரைக்கதையாக எழுதும்படி சொன்னார். அவருக்குப் பிடித்துவிடவே ஷூட்டிங் போய்விட்டோம். படம் இறுதி வடிவத்துக்கு வரும்வரை எந்தவித செய்திகளையும் கசியவிட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பைத் தொடங்கினோம். இப்போது பின் தயாரிப்புப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.

'மஜிலி' தெலுங்குப் படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளசிக் 'டக்கர்' படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்திருக்கிறார். அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் 'டக்கர்' படத்துக்கு, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். கா.கெளதம் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் உதயகுமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in