

'மார்க்கெட் ராஜா MBBS' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் படத்தில் புகை பிடிக்கும் காட்சிக்காக, ராதிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தாப்பர், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மார்க்கெட் ராஜா MBBS'. சுரபி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். கே.வி.குகன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ள இந்தப் படம் நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராதிகா சரத்குமார் கையில் சுருட்டு வைத்திருப்பது போல் வடிவமைத்து வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், ராதிகா சரத்குமாருக்கு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் குழந்தைசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், '' 'மார்க்கெட் ராஜா MBBS’ ட்ரெய்லரில் புகை பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டத்துக்கு எதிரானது.
புகை பிடிக்கும் காட்சியில் நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள். படத்தின் போஸ்டரிலும் அது இடம்பெற்றுள்ளது. நீங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டம் 5 மற்றும் 22ம் பிரிவுகளுக்கு எதிரான மீறலாகும்.
ஒரு படத்தின் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விளம்பரங்களில் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை எந்த வகையிலும் காட்டக்கூடாது. காட்டினால் அது கோட்பா சட்டத்தின் படி குற்றமாகும். அப்படிக் காட்டப்படுதல் மறைமுகமான விளம்பரமாகக் கருதப்படும்.
இனிமேல் படம் சார்பாக வெளியாகவுள்ள வீடியோ மற்றும் போஸ்டர்களில் இந்த சட்ட விதிமீறல் இருக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுவரை வெளியிடப்பட்டுள்ள வீடியோ மற்றும் போஸ்டர்களை சமூக வலைத்தளத்திலிருந்து நிக்க வேண்டும்'' என ராதிகாவுக்கு அனுப்பிய நோட்டீஸில் குழந்தைசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.