

ஜீ தமிழ் தொலைக்காட்சி முதல்முறையாக ‘ஜீ சினி அவார்ட்ஸ் தமிழ் 2020’ என்ற விருது நிகழ்ச்சியை நடத்துகிறது. கடந்த 2018 டிசம்பர் 1-ம் தேதி முதல் 2019 நவம்பர் 30-ம் தேதி வரை வெளியான திரைப்படங்கள் மற்றும் அந்த படங்களில் சிறப்பாக பங்களித்த கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விருதுக்கு தகுதியான திரைப்படங்கள், கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் நடிகை சுஹாசினி மணிரத்னம், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், கரு.பழனியப்பன், திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.
சிறந்த திரைப்படம், இயக்குநர், நாயகன், நாயகி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜனவரி 4-ம் தேதி நடக்க உள்ளது. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் நடிகர் கார்த்தி மற்றும் ஜீ தமிழ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.