

வி.ராம்ஜி
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மூன்று நடிகர்கள் ‘உத்தமபுத்திரன்’ என்ற தலைப்பில் வெளியான படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படியான தலைப்பில், அடுத்தடுத்த காலகட்டங்களில் படமெடுப்பது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. அப்படி இன்றைக்கும் மறக்கமுடியாத தலைப்பாக இருப்பதில் முக்கிய இடம் வகிக்கிறான் ‘உத்தமபுத்திரன்’.
1940-ம் ஆண்டு, அதாவது சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, ‘உத்தமபுத்திரன்’ எனும் தலைப்பில் படம் வெளியானது. புகழ் மிக்க ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனம்தான் இந்தப் படத்தைத் தயாரித்தது. வழக்கம்போல் இந்த நிறுவனத்தின் டி.ஆர்.சுந்தரம் ‘உத்தமபுத்திரன்’ படத்தை இயக்கினார்.
இதில், பி.யு.சின்னப்பாதான் நாயகன். இவர் அந்தக் கால கமல்,ரஜினி. அதாவது தமிழ் சினிமாவின் ஆரம்பகட்டத்தில், முதன்முதலாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வந்தவர்களில் ஒருவர். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், காளி என்.ரத்தினம், எம்.வி.ராஜம்மா உட்பட பலரும் நடித்திருந்தனர்.
அந்தக் காலத்திலேயே இப்படியெல்லாம் எடுக்கமுடியுமா என்று வியக்கும் அளவுக்கு தொழில்நுட்ப நேர்த்தியுடன் வெளியான ‘உத்தமபுத்திரன்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். திரையிட்ட ஊர்களிலெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. இந்தப் படத்தின் மூலம், தயாரிப்பாளருக்கு ஐந்து லட்ச ரூபாய் லாபம் கிடைத்தது என்றால், படத்தின் தாக்கத்தையும் அந்தக் காலத்து ஐந்து லட்ச ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இப்போது வரும் படங்களை ‘இது அந்தப் படத்தின் தழுவல்’, ‘அது இந்த மொழிப் படத்தின் காப்பி’ என்றெல்லாம் படம் ஆரம்பித்த பதினைந்தாவது நிமிடத்திலேயே சொல்லிவிடுகிறார்கள் ரசிகர்கள். இந்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் ‘தி மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டது என்பது அப்போதைய ரசிகர்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தாலும் ‘ஹாலிவுட் படத்தோட தரத்துக்குக் குறையாம பண்ணிருக்காங்கப்பா’ என்று இன்னும் கொண்டாடியிருப்பார்கள் பி.யு,சின்னப்பாவின் ‘உத்தமபுத்திரன்’ திரைப்படத்தை!
1940-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 24-ம் தேதி ரிலீசானது இந்தப் படம். இதையடுத்து 18 வருடங்கள் கழித்து, அதாவது 1958-ம் ஆண்டு, மீண்டும் அதே தலைப்பில், கிட்டத்தட்ட அதே கதையுடன் உருவாகி வெளியானது ‘உத்தமபுத்திரன்’.
வீனஸ் பிக்சர்ஸ் எனும் புகழ்மிக்க நிறுவனம் தயாரித்தது. இதில் இயக்குநர் ஸ்ரீதரும் பங்குதாரர். சிவாஜிகணேசன், பத்மினி, நம்பியார், தங்கவேலு, எம்.கே.ராதா, ஓஏகே.தேவர், பி.கண்ணாம்பா முதலானோர் நடித்திருந்தனர். சிவாஜி டபுள் ஆக்ஷன். பின்னாளில் ஒன்பது வேடங்களிலெல்லாம் நடித்து அசத்திய சிவாஜிக்கு, முதல் டபுள் ஆக்ஷன் படம் இதுதான்!
1958-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியானது சிவாஜியின் ‘உத்தமபுத்திரன்’. ஜி.ராமனாதன் இசை. தஞ்சை ராமையாதாஸ், சுந்தர வாத்தியார், கு.மா. பாலசுப்ரமணியன், பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதலானோர் பாடல்களை எழுதினார்கள். டி.எம்.எஸ்., சுசீலா,சீர்காழி கோவிந்தராஜன், லீலா, ஜிக்கி, ஜமுனாராணி, ஏபி.கோமளா முதலானோர் பாடியிருந்தார்கள். ‘அன்பே அமுதே அருங்கனியே’, ‘உன்னழகைக் கன்னியர் சொன்னதினாலே’, ‘யாரடி நீ மோகினி’, ‘முல்லை மலர் மேலே’, ‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’, ‘கொண்டாட்டம் கொண்டாடம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்’, ‘வசந்த முல்லை போலே’ என்று எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்.
படத்தின் திரைக்கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதியிருந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் எனப் பேரெடுத்த ஏ.வின்செண்ட் இந்தப் படத்துக்கு கேமிராமேனாகப் பணிபுரிந்தார். டி.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார்.
அந்தக் காலத்தில், டபுள் ஆக்ஷனில் மிரட்டியெடுத்த படம் இது. படத்தில் சிவாஜியும் சிவாஜியும் வரும் காட்சிகளெல்லாம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டிருக்கும். நடிப்பில் எப்போதும் மிரட்டியெடுக்கிற சிவாஜி, இந்தப் படத்தில் ஸ்டைலால் அதகளம் பண்ணியிருப்பார். ‘யாரடி நீ மோகினி’ பாடலுக்கு சிவாஜியின் கைத்தட்டுகிற ஆக்ஷனும் நடந்து திரும்புகிற வேகமும், இப்போதைய ரஜினியின் ஸ்டைலின் ஆரம்பப்புள்ளி என்பதை உணரலாம். இதை ரஜினியே கூட சொல்லியிருக்கிறார்.
வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஸ்ரீதரின் வசனத்தில்,சிவாஜியின் நடிப்பில் வெளியான ‘உத்தமபுத்திரன்’ பிரமாண்டமான வெற்றியைப்பெற்றது. இது, தமிழ் சினிமாவின் இரண்டாவது ‘உத்தமபுத்திரன்’.
ஓர் கொசுறு தகவல்... இந்தப்படத்துக்கு முன்னதாக ‘உத்தமபுத்திரன்’ என்ற தலைப்பில், படப்பிடிப்பு ஆரம்பம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த உத்தமபுத்திரனும் விளம்பரம் செய்யப்பட்டது. இதில்தான் சிவாஜி நடித்தார். அது தெரியும் நமக்கு. அந்த ‘உத்தமபுத்திரன்’ படப்பிடிப்பு துவங்காமலேயே நிறுத்தப்பட்டது. படம் கைவிடப்பட்டது. அந்தப் படத்தில் ஹீரோ... எம்ஜிஆர்.
சிவாஜியின் ‘உத்தமபுத்திரன்’ வெளியாகி 61-ம் ஆண்டு இது. மூன்றாவதாக 2010-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி, வெளியானது ‘உத்தமபுத்திரன்’. தனுஷ், ஜெனிலியா, விவேக், பாக்யராஜ் முதலானோர் நடித்த இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கினார். விஜய் ஆண்டனி இசையமைத்தார்.
இந்தப் படம் குறித்துதான் நமக்குத் தெரியுமே!
ஆக, தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உயிர்ப்புடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது ‘உத்தமபுத்திரன்’ தலைப்பு.