

என்னுடைய நடிப்பு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லையென்றால அது என்னுடைய தவறாகத்தான் இருக்கும். ஒருவேளை ஏதாவது தவறு நிகழ்ந்தால் அது என்னால்தான் நடந்திருக்கும் என்று துருவ் விக்ரம் பேசினார்.
சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ள இந்தப் படம் நாளை (நவம்பர் 22) வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளின்போது துருவ் விக்ரம் பேசியதாவது:
'' வர்மா படம் கைவிடப்பட்டது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் என் அப்பாவின் முடிவில் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். என்னுடைய வாழ்க்கைக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவரே கவனித்துக் கொண்டு, சிறந்த நடிப்பை வெளிப்படுத்த எனக்கு உதவினார். என்னுடைய நடிப்பு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லையென்றால அது என்னுடைய தவறாகத்தான் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு காட்சியையும் அப்பாதான் இயற்றினார். ஒருவேளை ஏதாவது தவறு நிகழ்ந்தால் அது என்னால்தான் நடந்திருக்கும். அப்பாவுடைய நடிப்புத் திறன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே உங்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யவில்லை என்றால் அது என்னுடைய தவறுதான்.
என்ன நடந்தாலும், நான் என்னுடைய வயதை மறைக்க முடியாது. ஆம், என் வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு நடிகனாக, ஒருவர் எல்லா வகையான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். வயது அதற்கு ஒரு தடையல்ல. 'ஆதித்ய வர்மா'வில், என் வயதுக்கு ஏற்ற காட்சிகளும் உள்ளன. வேறொரு நபரின் பார்வையில் சிந்திக்க வேண்டிய காட்சிகளும் உள்ளன.
என்னை விட, ரசிகர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும் எதைக் கொடுக்கக் கூடாது என்பதில அப்பா தெளிவாக இருக்கிறார். படக் குழுவுடன் அமர்ந்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். அதே நேரத்தில் படத்தின் அடிப்படைக் கருவையும் நாங்க தக்க வைத்திருக்கிறோம்''.
இவ்வாறு துருவ் விக்ரம் பேசினார்.